மேபேங்க்கின் ‘பரிவுச் சந்தை’ திட்டம் விரிவாக்கம் காண்கிறது

மேபேங்க்கின் ‘பரிவுச் சந்தை’ திட்டம் விரிவாக்கம் காண்கிறது

3 mins read
3cf9edf5-ad21-46dd-b8b7-61dc8a64c3f8
சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை (இடமிருந்து) சட்ட அமைச்சர் எட்வின் டோங், தென்கிழக்கு மாவட்ட மேயர் தினேஷ் வாசு தாஸ், மேபேங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்வின் லீ மூவரும் தொடங்கி வைத்தனர். - படம்: மேபேங்க்
Google News Preferred Icon

தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ‘அன்பின் பயணம்’ இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் மேபேங்க்கின் ‘பரிவுச் சந்தை’ 3,000 பேருக்கு உதவும் நோக்கில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

இதற்காக 1,300 மேபேங்க் ஊழியர்கள் களமிறக்கப்பட்டனர். அத்துடன், 14 மலாய் முஸ்லிம் அமைப்புகள் மூலம் 2,100 பயனாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ‘அன்பின் பயணம்’ இயக்கத்தைத் தொடங்கிவைத்து 16 நாள்களே ஆன நிலையில், மேபேங்க் அதன் முதல் முக்கியப் பெருநிறுவனத் தோழமை அமைப்பாக (Corporate Friend) இணைந்துள்ளது. 

மேலும், தனது இரண்டாவது ‘பரிவுச் சந்தை’ திட்டத்தை இந்த இயக்கத்துடன் இணைத்து தனது ஆதரவை அது வலுப்படுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பரிவுச் சந்தை’ திட்டம் மேபேங்க் சிங்கப்பூரின் முக்கியச் சமூகச் சந்தை முன்னெடுப்பாகும்.

இது பயனாளர்க்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குவதோடு, சமூகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் புதிதாகத் தொடங்கியுள்ள ‘அன்பின் பயணம்’ இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் முதல் முக்கியச் சமூகத் திட்டங்களில் ஒன்றாக மேபேங்கின்  இரண்டாவது பரிவுச் சந்தை திகழ்கிறது. 

மேபேங்க் வங்கிக்கும் தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றத்திற்கும் இடையே உள்ள நீண்டகாலப் பங்காளித்துவத்தின் அடிப்படையில், இந்தக் கூட்டாண்மை ஒற்றை நிகழ்ச்சியோடு நின்றுவிடாமல், தொடர்ந்து தன்னார்வத் தொண்டு மற்றும் சமூகப் பங்கேற்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் மேபேங்க்கின் உலகளாவிய வர்த்தகச் சமூகப் பொறுப்புணர்வு தினத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இது நடைபெற்றது. 

ஒட்டுமொத்தமாக, மேபேங்க் 3,000 பயனாளர்களுக்கு $590,000க்கும் அதிகமான தொகையை வழங்குகிறது. சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 1,690ஆக இருந்தது.

14 மலாய் முஸ்லிம் அமைப்புகளின் பங்களிப்பு, தேவைகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து, சமூக, பெருநிறுவனப் பங்காளிகளை ஒன்றிணைத்து, மக்களுக்கு வளங்களையும் ஆதரவையும் கொண்டுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமூகங்கள் எவ்வாறு குறைபாடுகளைக் கண்டறிந்து, அதிகப் பங்காளிகளையும் வளங்களையும் ஒன்றிணைத்து, மக்கள் எளிதில் உதவியைப் பெறுவதை உறுதிசெய்வது என்பது குறித்த உரையாடல்கள் அதிகரித்து வரும் சூழலில் இது நடைபெறுகிறது.

‘அன்பின் பயணம்’ இந்தக் கோட்பாடுகளைச் சமூகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி, தனிநபர்கள், வணிகங்கள், சமூக அமைப்புகள்  ஆகியவற்றுக்கான தங்களின் நேரம், திறன்கள், அனுபவம் மற்றும் ஆதரவை வழங்கும் தளத்தை உருவாக்குகிறது.

இதன் மூலம் 1,300 மேபேங்க் ஊழியர்களைக் கொண்டு மனிதத் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பயனாளரும் $100 மதிப்பிலான ‘கருணைப் புள்ளிகளை’ (Kindness Credits) பெற்றனர். இதைக் கொண்டு குடும்பங்கள் தங்களின் தேவைக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடிந்தது.

மேபேங்க் களமிறக்கிய ஊழியர்கள் பயனாளிகளுக்குப் பொருள்களைக் கண்டறியவும் ஒப்பிடவும் பொட்டலமிடவும் உதவியதோடு அவர்களுடன் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

சமூகத்தில் எங்குத் தேவைகள் உள்ளன, யார் விடுபடுகிறார்கள், அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்ற எளிய கேள்விகளுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகத் திரு தினே‌ஷ் கூறினார். 

“இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பரிவுச் சந்தை, எளிய மக்களுக்கு ஆதரவளிப்பதில் மேபேங்க்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று மேபேங்க் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்வின் லீ கூறினார்.

‘தென்கிழக்கின் தோழர்கள்’ திட்டத்தில் இணைய விரும்புவோர் https://go.gov.sg/friends-of-south-east என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது southeast_cdc@pa.gov.sg என்ற மின்னஞ்சல் வழியே தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
வங்கிஉதவிமக்கள்தொகை