செப்டம்பர் 11 தாக்குதலை நினைவுப்படுத்தியதாக விளம்பரத்துக்கு எதிராகப் புகார்

2 mins read
617f13e6-6698-498e-9f8a-254ff7f1fc9a
பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்துக்கும் பாரிசுக்கும் இடையே விமானச் சேவையை மீண்டும் தொடர இருப்பதை அறிவிக்கும் நோக்குடன் விளம்பரம் வெளியிடப்பட்டதாக பாகிஸ்தானிய அனைத்துலக விமானச் சேவை தெரிவித்தது. - படம்: பாகிஸ்தான் அனைத்துலக விமானச் சேவை/எக்ஸ் தளம்

இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முக்கிய சின்னங்களாக இருந்த இரட்டைக் கோபுரம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று தகர்க்கப்பட்டன.

விமானங்களைப் பிணைபிடித்து அவற்றை அந்தக் கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் மோதின.

இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அனைத்துலக விமானச் சேவை வெளியிட்டுள்ள விளம்பரம் இத்தாக்குதலை நினைவுப்படுத்துவதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

அந்த விளம்பரத்தில் பாகிஸ்தான் அனைத்துல விமானச் சேவையின் விமானம் ஒன்று பிரெஞ்சுத் தலைநகர் பாரிசின் முக்கிய சின்னமான ஐஃபில் கோபுரத்தை நோக்கி பறப்பது போன்ற படம் உள்ளது.

அத்துடன் “பாரிஸ், உன்னை நோக்கி இன்று வருகிறோம்,” என்ற வாசகமும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.

விளம்பரம் வடிவமைக்கப்பட்ட விதம் குறித்து பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அதைக் கண்டித்து பலர் புகார் செய்துள்ளனர்.

பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்துக்கும் பாரிசுக்கும் இடையே விமானச் சேவையை மீண்டும் தொடர இருப்பதை அறிவிக்கும் நோக்குடன் விளம்பரம் வெளியிடப்பட்டதாக பாகிஸ்தானிய அனைத்துலக விமானச் சேவை தெரிவித்தது.

செப்டம்பர் 11 தாக்குதலுடன் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் காலித் ஷேக் முகம்மது 2003ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

அல் காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா, 2011ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, விளம்பரத்தைப் பயன்படுத்த எவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதை கண்டறிய விசாரணை நடத்தும்படி பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்