சிங்கப்பூரின் கட்டுமானக் கழிவுகள் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலுள்ள பொந்தியானில் மீண்டும் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற வாரியம் மலேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஜோகூர் தென்மேற்கு மாவட்டத்தின் ரிம்பா தெர்ஜுன் பகுதியில் மூடப்பட்ட குப்பைக் கிடங்கில் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்புடைய 10 லாரிகள் பிடிபட்டதாக மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் புதன்கிழமை (நவம்பர் 18) செய்தி வெளியிட்டது.
சிங்கப்பூரிலிருந்து கட்டுமானக் கழிவுகள் ரிம்பா தெர்ஜுனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து அறிவோம் எனத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு வியாழக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.
அப்புகார்களைத் தீவிரமாகக் கருதுவதாகவும் உண்மை நிலவரத்தை அறிய மலேசிய தேசியக் கழிவுப்பொருள் நிர்வாக ஆணையமான ‘எஸ்டபிள்யுகார்ப்’ அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது.
சிங்கப்பூர் விதிமுறைப்படி, கட்டுமானம், கட்டட இடிப்புக் கழிவுகளை முறையாகப் பிரித்து மறுபயனீடு செய்ய வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். நெகிழி போன்ற கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை உள்ளது.
எனினும், இரும்புக் கழிவுகள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு ஏற்றுமதி செய்யலாம். வழக்கமான நேரத்திற்கு வெளியிலும் கழிவு நிலையங்களை வாரியம் கண்காணித்து ஆய்வு செய்கிறது. விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, பிடிபட்ட எட்டு லாரிகள் கற்கழிவுகளை ஏற்றி மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான சுங்கப் பதிவுகள் உள்ளதாகவும் மற்ற இரு லாரிகளுக்குப் பதிவுகள் இல்லை என்றும் பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து சோதனை நடந்ததாகவும் ஜோகூர் எஸ்டபிள்யுகார்ப் இயக்குநர் சைனல் ஃபித்ரி அகமது கூறினார்.
