காத்மாண்டு: நேப்பாள அரசு தனது நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, செயல்திறனைக் கூட்டும் நோக்கில், கிட்டத்தட்ட 10,000 அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் கட்டாய ஓய்வளிக்கும் வகையில் புதிய ‘கூட்டரசுப் பணி மசோதா’வை முன்மொழிய ஆயத்தமாகி வருகிறது.
அத்திட்டத்தின்படி, 30 ஆண்டுகள் பணியாற்றிய அல்லது 55 வயதை எட்டிய ஊழியர்கள் உடனடியாகப் பணியிலிருந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தப்படுவர்.
வழக்கமாக ஆண்டுக்கு 2,000 முதல் 3,000 ஊழியர்கள் மட்டுமே ஓய்வுபெறும் நிலையில், இப்புதிய சட்டத்தால் ஒரே நாளில் மேலும் 10,000 பேர் வேலையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், இச்சட்டம் தலைமைச் செயலரின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாகவும், செயலர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாகவும் குறைக்கிறது. இதனால், ஒரே நேரத்தில் 52 உயர்நிலைச் செயலர்கள் ஓய்வுபெற நேரிடும்.
நேப்பாள அரசு அண்மையில் தனது அமைச்சுகளின் எண்ணிக்கையை 22லிருந்து 18 ஆகக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியர்களின் ஒப்புதலின்றி அவர்களது பணிக்கால நிபந்தனைகளையோ, ஓய்வூதியச் சலுகைகளையோ மாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்குப் பதிலாக, அவர்களுக்குத் தகுந்த இழப்பீட்டுடன் கூடிய கண்ணியமான விருப்ப ஓய்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என முன்னாள் தலைமைச் செயலர் விமல் கொய்ராலா வலியுறுத்தியுள்ளார்.
ஆயினும், கட்டாய ஓய்வுத் திட்டத்தை இவ்வாண்டு ஜூலை நடுப்பகுதிக்குள் அவசரச் சட்டமாக நடைமுறைப்படுத்த நேப்பாள அரசு திட்டமிட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

