எரிபொருள் விலை குறித்து கவலை; 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்த ஏர் நியூசிலாந்து

எரிபொருள் விலை குறித்து கவலை; 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்த ஏர் நியூசிலாந்து

2 mins read
8c7f48b1-9f69-4e15-8e5a-728bec377c90
ஏர் நியூசிலாந்தின் மொத்த விமானச் சேவைகளில் ஏறத்தாழ ஐந்து விழுக்காடு ரத்து செய்யப்படும் என்றும் இதனால் 44,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கில் ரவிசங்கர் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம் வியாழக்கிழமை (மார்ச் 12) அறிவித்துள்ளது.

ஏர் நியூசிலாந்தின் மொத்த விமானச் சேவைகளில் ஏறத்தாழ ஐந்து விழுக்காடு ரத்து செய்யப்படும் என்றும் இதனால் 44,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கில் ரவிசங்கர் தெரிவித்தார்.

ரத்து செய்யப்படும் விமானங்கள் பெரும்பாலும் நியூசிலாந்திற்குள்ளான உள்நாட்டுச் சேவைகளாக இருக்கும் என்றும் சில அனைத்துலக விமானச் சேவைகளும் அதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான மாற்றுப் பாதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான விமானச் சேவைகள் பாதிக்கப்படாது என்று ரவிசங்கர் மேலும் தெரிவித்தார்.

“மத்திய கிழக்கு மோதல் காரணமாக விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத ஏற்ற இறக்கங்களால், உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் இந்த அதிகரித்த செலவுகளைச் சமாளிக்க விமானக் கட்டணங்களையும் தங்கள் கால அட்டவணைகளையும் மாற்றி அமைத்து வருகின்றன,” என்று ரவிசங்கர் கூறினார்.

பொதுவாக ஒரு பீப்பாய் விமான எரிபொருளின் விலை ஏறத்தாழ 85 அமெரிக்க டாலராக இருந்தது என்றும் தற்போது அதன் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமானப் பயணக் கட்டணத்தை இயன்றவரை மலிவாக வைத்திருக்கவும், எரிபொருள் பயன்பாட்டில் நிறுவனம் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த ரத்து நடவடிக்கைகள் உதவும் என்றார் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஏர் நியூசிலாந்து நிறுவனம் அனைத்து பயணப் பாதைகளுக்குமான பயணச்சீட்டு விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே. மார்ச் 18 முதல் அனைத்து பயணப் பாதைகளுக்குமான விமானச் சேவைக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தப்போவதாக கெத்தே பசிபிக் ஏர்வேஸ் வியாழக்கிழமை (மார்ச் 12) அறிவித்துள்ளது.

குறுகிய தூரப் பயணங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் 142 ஹாங்காங் டாலரிலிருந்து 290 ஹாங்காங் டாலராக உயரும்.

நடுத்தர தூரப் பயணங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் 264 ஹாங்காங் டாலரிலிருந்து 541 ஹாங்காங் டாலராக உயரும்.

நீண்ட தூரப் பயணங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் 569 ஹாங்காங் டாலரிலிருந்து 1,164 ஹாங்காங் டாலராக, அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக உயரும்.

“எரிபொருள் கூடுதல் கட்டணமானது சீரான இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், அதன் விலை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது,” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெத்தே பசிபிக் நிறுவனம், எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு மாதாந்திர அடிப்படையில் தனது கூடுதல் கட்டணங்களை மாற்றியமைத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்