தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிமக்களைச் சிறையில் அடைத்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்துக்கு கண்டனம்

2 mins read
41fdcf7e-3455-489f-8917-a093c82b10f7
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று வரை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: பொதுமக்களைச் சிறையில் அடைத்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஒன்றியம் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏறக்குறைய 25 பேருக்கு ராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது போராட்டம் வெடித்தது. அப்போது ராணுவ அமைப்புகளைத் தாக்கியதாகக் கூறி 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இம்ரான் கான் தொடர்பான வழக்குகளில் ராணுவம் பெரும்பங்கு ஆற்றி வருகிறது.

இந்நிலையில், “2023 மே 9ஆம் தேதி போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களை ராணுவ நீதிமன்றம் சிறையில் அடைத்தது கவலையளிக்கிறது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சும், பொதுமக்களை ராணுவ நீதிமன்றம் விசாரிப்பது வெளிப்படைத்தன்மை இல்லாததைக் காட்டுகிறது. நேர்மையான விசாரணையைக் கீழறுக்கும் விதத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், “சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கையின்கீழ் பாகிஸ்தான் முரண்பாட்டுடன் நடந்துகொள்கிறது,” என்று கூறியது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் ராணுவ நிலைகளைத் தாக்கினர். இதையடுத்து துணை ராணுவம் அவர்களைக் கைது செய்தது.

இம்ரான் கான், பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது.

மே 2023ல் கைது செய்யப்பட்ட பிறகு அவர், அதே ஆண்டு சிறிது காலம் விடுவிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்