ஈரானுடனான மோதல் தவறான செயல்: 61% அமெரிக்கர்கள் கருத்து

ஈரானுடனான மோதல் தவறான செயல்: 61% அமெரிக்கர்கள் கருத்து

2 mins read
87c26d69-f069-4c2d-b2da-c02732fbe7fb
கருத்துக்கணிப்பில் பங்கேற்றோரில் 36 விழுக்காட்டினரே அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை சரியானது எனத் தெரிவித்துள்ளனர். - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராகத் தங்கள் நாடு ராணுவ வலிமையைப் பயன்படுத்தியது தவறான செயல் என்று அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பான்மையினர் நம்புவதாக, வெள்ளிக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

வாஷிங்டன் போஸ்ட் - ஏபிசி நியூஸ் - இப்சோஸ் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பின்படி, 61 விழுக்காட்டு அமெரிக்கக் குடிமக்கள் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தவறான செயல் என்று கூறியுள்ளனர். ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்ததாகப் பத்தில் இரண்டு பேருக்கும் குறைவானவர்களே நம்புகின்றனர்.

அந்நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டதாகக் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் கருதுகின்றனர். அதே நேரத்தில், அது குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியாக இராது என்று 40 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடனான அமெரிக்காவின் மோதல், “2006ஆம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த ஈராக் போர், 1970களின் தொடக்கத்தில் நடந்த வியட்நாம் போர் ஆகியவற்றைப் போலவே அமெரிக்கர்களிடையே மிகுந்த செல்வாக்கற்ற ஒன்றாக உள்ளது,” என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், ஈரான்மீதான மோதலுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் ஆதரவு இன்னும் அதிகமாகவே உள்ளது. அக்கட்சியினரில் 79 விழுக்காட்டினர் ‘அது சரியான முடிவு’ எனக் கூறியதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

ஒட்டுமொத்தத்தில், 36 விழுக்காட்டினரே அதிபர் டிரம்ப் சரியான முடிவை எடுத்துள்ளதாகக் நம்புகின்றனர்.

அதே வேளையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பல அபாயங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதாக பெரும்பாலான அமெரிக்கக் குடிமக்கள் நம்புகின்றனர்.

அவர்களில் 61 விழுக்காட்டினர், இது பயங்கரவாதிகள் அமெரிக்கர்களைக் குறிவைக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இது அமெரிக்கப் பொருளியலை மந்தநிலைக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என 60 விழுக்காட்டினரும், அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடனான உறவை இது பலவீனப்படுத்தும் என 56 விழுக்காட்டினரும் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்மோதல்போர்கருத்துக்கணிப்பு