சிரியாவில் மூண்ட மோதல் போர்க் குற்றமாகக் கருதப்படலாம்: ஐ.நா.

சிரியாவில் மூண்ட மோதல் போர்க் குற்றமாகக் கருதப்படலாம்: ஐ.நா.

2 mins read
5b57134f-e7c4-4632-a62d-fcadaa0324a7
சிரியாவின் சுவெய்டா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் 1,700க்கும் அதிகமானோர் மாண்டதாகக் கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

ஜெனிவா: சிரியாவின் மேற்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு வாரம் நீடித்த வன்முறையால் 1,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிரிய அரசாங்க வீரர்கள், பழங்குடியைச் சேர்ந்த போராளிகள், ‘ட்ரூஸ்’ என்ற ஆயுதமேந்திய குழு ஆகியவற்றுக்கு இடையே மூண்ட மோதலில் கிட்டத்தட்ட 2,000 பேர் வீடுகளை இழந்ததாக நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட 85 பக்க அறிக்கை குறிப்பிட்டது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தனிப்பட்ட அனைத்துலக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் சுவெய்டா மாநிலத்தில் குறைந்தது 1,707 பேர் மாண்டதாகக் குறிப்பிட்டது.

அதில் பெரும்பாலோர் ட்ரூஸ் சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள். பலர் பெட்டுவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 225 பேர் அரசாங்க அதிகாரிகள்.

சுவெய்டா மாநிலத்தில் மூண்ட மோதல் அனைத்துலகப் போர்க் குற்றமாகக் கருதப்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவன விசாரணைக் குழு குறிப்பிட்டது.

சிரிய அரசாங்கம் நியமித்த மற்றொரு விசாரணைக் குழு, சுவெய்டாவில் நீடித்த மோதலில் அனைத்து தரப்பையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1,760 பேர் மாண்டனர் என்றும் 2,188 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தது.

பல்வேறு தரப்பினரால் மனிதநேய அத்துமீறல்கள் நடந்ததாகவும் விசாரணை அறிக்கை சொன்னது.

வன்முறைக்குப் பின் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட அரசாங்க விசாரணைக் குழு, சம்பவம் தொடர்பில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் மோதலை நேரில் பார்த்த சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணையை மேற்கொண்டதாகச் சொன்னது. விசாரணையின் முடிவுகளை நீதிமன்றத்துக்கு ஒப்படைத்திருப்பதையும் குழு பகிர்ந்துகொண்டது.

சுவெய்டாவில் மூண்ட மோதல், கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. ப‌‌‌ஷார் அல்-அஸாட்டின் ஆட்சி கவிழ்ந்து ஏழு மாதங்கள் கழித்து தாக்குதல் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்