கோலாலம்பூர்: மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவரை மீட்கும் நடவடிக்கையின்போது வெளிநாட்டவர் என நம்பப்படும் இருவர் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு காவல்துறையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது அவ்விருவரும் மாண்டனர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் அதுகுறித்து விளக்கினார்.
“இரவு 8.40 மணியளவில் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேக நபர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
“தற்காப்பிற்காக அதிரடிப் படையினர் பதிலடித் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலை முறியடித்தனர்.
“சந்தேக நபர்கள் இருவரும் இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தது மருத்துவப் பணியாளர்களால் உறுதிசெய்யப்பட்டது.
“அவர்களிடம் எந்தவோர் அடையாள ஆவணங்களும் இல்லை,” என்று அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்ட அறிக்கையில் திரு குமார் தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தின்போது மீட்கப்பட்ட இருவரும் வெளிநாட்டினர் என்றும் அவர்கள் 70 வயதுடைய ஆடவர் மற்றும் 30 வயதுடைய பெண் என்றும் கூறிய அவர், அந்த இருவரின் கண்களும் கரங்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
சந்தேக நபர்கள் இருவருக்கு அருகில் ஐந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட தானியங்கிக் கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் கொண்ட ரிவால்வர் துப்பாக்கி மற்றும் ஒரு நீண்ட வாள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும் திரு குமார் கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கைது செய்யப்பட்டோரில் ஒருவர் மட்டுமே மலேசியர் என்றும் அவர் தெரிவித்தார்.


