லண்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஃபார்முலா 1 கார்ப் பந்தயத்தின் பஹ்ரேன், சவூதி அரேபிய ‘கிராண்ட் பிரீ’ பந்தயங்கள் நடைபெறமாட்டா என்று சனிக்கிழமை (மார்ச் 14) அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
லிபர்ட்டி மீடியாவுக்குச் சொந்தமான ஃபார்முலா 1 அமைப்பு, அனைத்துலக மோட்டார் வாகனக் கூட்டமைப்பு, உள்ளூர் விளம்பரதாரர்கள் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அடுத்த மாதம் நடைபெறவிருந்த இந்தப் பந்தயங்களுக்குப் பதிலாக மாற்றுப் பந்தயங்கள் எதுவும் அட்டவணையில் சேர்க்கப்படமாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிர்வாகம், வானிலை ஆகியவற்றால் பந்தயங்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிகாரபூர்வ அறிக்கையில் இது குறித்துத் திட்டவட்டமாக எதுவும் கூறப்படவில்லை. இதன் மூலம், இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த 24 பந்தயங்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
இது குறித்து ஃபார்முலா 1 தலைமை நிர்வாகி ஸ்டெபானோ டொமெனிகாலி கூறுகையில், “இது ஒரு கடினமான முடிவு என்றாலும், மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த நிலையில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்,” என்றார்.

