விமான நிலையத்தில் குழப்பம்: மன்னிப்பு கேட்ட தாய் ஏர்வேஸ்

தேங்கிய பயணப்பெட்டிகளை உரிய பயணிகளிடம் 72 மணி நேரத்தில் ஒப்படைக்க உறுதி

விமான நிலையத்தில் குழப்பம்: மன்னிப்பு கேட்ட தாய் ஏர்வேஸ்

படம்: ராய்ட்டர்ஸ்

29 Sep 2026 - 5:39 pm

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் சுவர்னபூமி விமான நிலையத்தில் பயணப்பெட்டிகள் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்திற்குத் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் எம்சிரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

குழப்பத்திற்கு முழு பொறுப்பை ஏற்பதாகக் கூறிய அவர், விமான நிலையத்தில் தேங்கியுள்ள 5,000க்கும் அதிகமான பயணப்பெட்டிகள் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் அடுத்த 72 மணிநேரத்துக்குள் ஒப்படைக்கப்படும் என்று உறுதிகூறினார்.

பயணப்பெட்டிகளை உரிய பயணிகளிடம் ஒப்படைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயணப்பெட்டிகளை உரிய பயணிகளிடம் ஒப்படைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

செயல்பாடுகளைத் தொடர்ந்து நிலையாக வைத்திருக்க, பேங்காக்கிலிருந்து புறப்படும் தாய் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை அடுத்த சில நாள்களுக்கு 30லிருந்து 40 விழுக்காடுவரை குறைக்கப்படும் என்றும் திரு சாய் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் நிலப்பணி ஊழியர்களுக்கான பற்றாக்குறை கடுமையாக இருந்ததே பிரச்சினைக்கு மூலக் காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார்.

கடுமையான வெள்ளம் காரணமாக ஊழியர்கள் பலரால் விமான நிலையத்திற்கு வர இயலவில்லை.

பயணப்பெட்டிகளில் ஏற்பட்ட குழப்பம், விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள், விமானச் சேவைகளில் தாமதம், ரத்தான சேவைகள் எனப் பல்வேறு சிக்கல்கள் ஒருசில நாள்களாக நீடித்துவந்த நிலையில் திரு சாய் நேரடி ஒளிபரப்பில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) பேசினார்.

மூத்த நிர்வாகிகள் மெத்தனமாக இருந்ததாகக் கூறப்படுவதை நிராகரித்த அவர், மூன்று நாள்களாக அவர்கள் விமான நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

மழை நிலவரத்தை எதிர்கொள்ள விமான நிறுவனம் தயார்நிலையில் இருந்ததையும் குறிப்பிட்ட அவர், எதிர்பார்த்ததைவிட நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது என்றார்.

பல பயணிகள் சுவர்னபூமி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.
பல பயணிகள் சுவர்னபூமி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபயணப்பெட்டிவிமான நிலையம்மன்னிப்பு