ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கு நிலம்வழிச் சோதனைச்சாவடிகள் வழியாகப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்காக கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜூன்1ஆம் தேதியிலிருந்து மூன்று மாத முன்னோட்டத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து குழப்பமாக இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியிட வேண்டும் என்றும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தங்கள் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்மூலம் புதிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பலர் தெரிவித்தனர்.
ஆனால் முன்னோட்டத் திட்டம் தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதுகுறித்து போதுமான தகவல்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
“கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான செயல்முறை விளக்கம் இன்னும் தெரியவில்லை. அதுதொடர்பான தகவலை எவ்வாறு, எங்கு பெறுவது என்பது குறித்த தகவல்களும் தெளிவாக இல்லை. புதிய அணுகுமுறை குறித்து மலேசிய அரசாங்கம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட வேண்டும்,” என்று 43 வயது கணக்குத் தணிக்கையாளர் டெஸ்மண்ட் இங் தெரிவித்தார்.
தற்போது மோட்டார் சைக்கிள்களுக்காக நடப்பில் இருக்கும் ‘எம்பைக்’ முறைக்குப் பதிலாகப் புதிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக 37 வயது கே. பிரகாஷ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“முன்னோட்டத் திட்டம் பேருந்துகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்களுக்கும் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று பிறகுதான் தெரியவந்தது.
“முன்னோட்டத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு அதுகுறித்து மலேசிய அரசாங்கம் கூடுதல் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பயணம் சுமுகமானதாக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும்,” என்றார் திரு பிரகாஷ்.

