இபோலா பரவல்: விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் தொடக்கம்

இபோலா பரவல்: விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் தொடக்கம்

படம்: ஆப்பிரிக்கா அவர் ஹோம் ஃபேஸ்புக்

02 Jun 2026 - 6:32 pm

2 mins read

கின்ஷாசா: தொடர்ந்து பரவிவரும் இபோலா நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காங்கோ தலைநகரில் உள்ள விமான நிலையத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசு மீண்டும் திறந்துள்ளது என்று அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்தது. இதன்மூலம், தங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதைத் துண்டித்ததாகக் கூறிய சில குடியிருப்பாளர்களின் முந்தைய நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முதல் இபோலா நோயாளிகள் உறுதிசெய்யப்பட்ட இடுரியின் முக்கிய விமான நிலையமான புனியாவிற்குச் செல்லும் பயணிகள் விமானச் சேவைகளை நிறுத்தி வைப்பதாக காங்கோ அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது. மனிதாபிமான மற்றும் மருத்துவ விமானங்கள் அனுமதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்து இயங்கின.

திங்கட்கிழமை (ஜூன் 1) பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைப் படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க தற்போது நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் உடனடியாக மீண்டும் திறக்கப்படும் என்றும் காங்கோவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், வந்தடைந்த பிறகும் அனைத்துப் பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்றும், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ள எந்தப் பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காங்கோவின் 17வது இபோலா பரவலாக, புண்டிபுக்யோ வகை இபோலா பரவலை ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மே 15ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் உடனடியாக இதை அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

ஏற்கெனவே பதிவுகளில் மூன்றாவது பெரியதாக உள்ள இந்தப் பரவல், பல வாரங்களாகக் கண்டறியப்படாமல் நீடித்தது என்றும் தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வரும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, அந்நாட்டில் இபோலா பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமான நிலையம்காங்கோஉலக சுகாதார நிறுவனம்