காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இபோலா கிருமித்தொற்று சம்பவங்கள் 260ஆக அதிகரித்துள்ளன. வரும் நாள்களில் இபோலா கிருமித்தொற்று மேலும் பரவக்கூடும் என்று அனைத்துலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
காங்கோவின் புனியா பகுதியில்தான் இபோலா கிருமித்தொற்று தொடங்கியது, அங்கு அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ராஜர் கம்பா, சனிக்கிழமை (மே 30) செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது திரு கம்பா, “அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் காங்கோவிற்கு உதவ முன்வந்துள்ளனர். இபோலாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. அந்த மருந்து தற்போது சோதனைத் திட்டத்தின் நடுப்பகுதியில்தான் உள்ளது. இருப்பினும் அது நல்ல முடிவுகளைக் கொடுத்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இபோலா கிருமியின் அரிய வகைத் திரிபான பன்டிபக்யோவால் (Bundibugyo) தற்போது சுகாதார நெருக்கடி எழுந்துள்ளது. இந்தக் கிருமி காங்கோவின் மூன்று மாநிலங்களில் பரவியுள்ளது. 12க்கும் மேற்பட்ட இடங்கள் கண்காணிப்பில் உள்ளன.
உகாண்டாவிலும் இபோலா பரவியுள்ளது. இதுவரை ஒன்பது பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
கிருமிப்பரவல் எதிர்பார்த்ததைவிட வேகமாக உள்ளதாக மருத்துவ அமைப்புகள் கூறுகின்றன. நூற்றுக்கும் அதிகமானவர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“இப்போது எழுந்துள்ள இபோலா நெருக்கடி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து யாராலும் கணிக்க முடியாது. இதற்கு முன்னர் பதிவான இபோலா நோய்த்தொற்று சம்பவங்களை விடத் தற்போது அதிகமானவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று சான்ஸ் ஃபிரன்டியர்ஸ் மருந்து அமைப்பின் துணை இயக்குநர் அலன் கான்சாலஸ் கூறினார்.
இபோலா கிருமி தொடர்பாக காங்கோவில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரத்த மாதிரிகள் வரை மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது. இதனால் அதிகாரிகளால் வேகமாகச் செயல்பட முடியவில்லை, இதனால் பரிசோதனைகளை காங்கோ விரிவுபடுத்தவுள்ளது.

