ஆக மோசமான இபோலா பரவலை எதிர்கொள்ளும் காங்கோ

ஆக மோசமான இபோலா பரவலை எதிர்கொள்ளும் காங்கோ

2 mins read
c357447e-0ede-4af3-8b7c-5f2eb79135ea
காங்கோவில் இபோலாவுக்குப் பலியான ஒருவரின் உடலைத் தூக்கிச் செல்லும் தொண்டூழியர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

கின்‌ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த வாரம் சராசரியாக ஒவ்வொரு 28 நிமிடங்களுக்கும் ஒருவர் இபோலாவுக்குப் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காங்கோவில் தற்போது தொடரும் இபோலா கிருமிப் பரவல் அந்நாடு இதுவரை கண்டிராத ஆக மோசமானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மரண எண்ணிக்கை

அந்நாட்டில் சென்ற வாரம் மேலும் 365 பேர் இபோலாவுக்குப் பலியாயினர். அங்கு இதுவரை இபோலாவுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,325ஐ தொட்டது.

முன்னதாக 2018லிருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காங்கோவில் ஏற்பட்ட இபோலா பரவல்தான் ஆக மோசமானதாக இருந்தது. அதில் 2,299 பேர் உயிரிழந்தனர்.

காங்கோவில் தொடரும் தற்போதைய இபோலா பரவல் குறித்து கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 5,000 பேர் அக்கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் தேசிய பொதுச் சுகாதாரக் கழகம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தெரிவித்தது.

ஒவ்வோர் 20 நாள்களிலும் தற்போதைய இபோலா கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளைப் பெரிய அளவில் விரிவுபடுத்தவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) மனிதாபிமான செயல்பாடுகள் பிரிவின் தலைவர் டாம் ஃபிளெட்சர் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) கூறினார்.

“காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா வெற்றிபெற்று வருகிறது,” என்று சுட்டிய அவர், “கிருமிப் பரவலை நமது நடவடிக்கைகளைவிடவும் வேகமாகச் செயல்பட விடக்கூடாது,” என்றும் குறிப்பிட்டார்.

கூடுதல் நிதியுதவி

ஐநாவின் மத்திய அவசர நடவடிக்கை நிதியம், மேலும் 30.5 மில்லியன் டாலர் (39 மில்லியன் வெள்ளி) நிதியுதவி அளிக்கப்போவதாக திரு ஃபிளெட்சர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஏற்கெனவே அந்த அமைப்பு காங்கோவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் 24 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியிருந்தது.

தற்போதைய இபோலா கிருமிப் பரவல் தீவிரமாக இருக்கும் பகுதியில் ஐநா மேலும் 20 மனிதாபிமான ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதோடு, உலக உணவுத் திட்டம் அதன் உணவு உதவி நடவடிக்கைகளை இபோலா சிகிச்சை நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இபோலா கிருமிப் பரவலால் மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவையும் நெருக்குதலை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்கிருமித்தொற்றுமருத்துவம்உதவிசிகிச்சைநிதிமனிதாபிமானம்ஐநா