வெளிநாட்டுச் செல்வந்தர்களைக் குறிவைத்த கொள்ளை தொடர்பில், மலேசிய மூத்த காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் கைது

வெளிநாட்டுச் செல்வந்தர்களைக் குறிவைத்த கொள்ளை தொடர்பில், மலேசிய மூத்த காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் கைது

2 mins read
6181f436-1ad4-4701-b16a-d4bb332241c7
கோலாலம்பூரில் உள்ள அரச மலேசியக் காவல்துறை தலைமையகத்தில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட பொருள்களைக் காட்டும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ். - படம்: கோலாலம்பூர் காவல்துறை ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: வெளிநாட்டுச் செல்வந்தர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உட்பட ஆறு பேர் புதன்கிழமை (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களால் ஏற்பட்ட இழப்புகள் 4.4 மில்லியன் ரிங்கிட் (US$1.1 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அந்த மூத்த காவல்துறை அதிகாரி, ஏப்ரல் 5ஆம் தேதி அதிகாலை வேளையில் கெப்போங்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குள் நுழைவதற்காக, காவல்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது என கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்ளூர் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.

‘சந்தேக நபர்கள் டொயோட்டா ஆல்ஃபார்ட், ரோல்ஸ்-ராய்ஸ், பென்ட்லி ஆகிய மூன்று சொகுசு கார்களையும், 24,200 ரிங்கிட், $1,200 அமெரிக்க டாலர் ரொக்கம், பல்வேறு நகைகள், தங்கக் கட்டிகள் அடங்கிய ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தையும் திருடியதாகக் கூறப்படுகிறது என்று தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டது.

பாதிக்கப்பட்டவர்களில், 29 முதல் 52 வயதுக்குட்பட்ட, சீனாவைச் சேர்ந்த ஓர் ஆண், ஒரு பெண், ஓர் இந்தோனீசியப் பெண் ஆகியோர் அடங்குவர் என்று காவல்துறைத் தலைவர் கூறினார்.

“சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர், துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது,” என்று திரு ஃபாடில் கூறியதாக மலாய் மெயில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவு உள்ளது என்றும் ஃபாடில் மேலும் கூறினார்.

உள்ளூர் செய்திகளின்படி, தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களாகப் பணிபுரியும், துப்பாக்கி உரிமம் பெற்ற மற்ற இரண்டு சந்தேக நபர்கள், கொள்ளைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்