துபாய்: ஈரானில் மறைந்த தலைவர் ஆயத்துல்லா அலி காமெனிக்குப் பிறகு மாற்றுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
தலைவரைத் தேர்ந்தெடுக்கச் சமயத் தலைவர்களும் நிபுணர்களும் இடம்பெற்ற குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினரான ஆயத்துல்லா முகம்மது மெஹ்தி மிர்பாகெரி அக்குழு ஒருமனதாக ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தெரிவித்துள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட தலைவரை நியமனம் செய்வதில் ஒரு சில நடைமுறைச் செயல்பாடுகள் உள்ளதால் விரைவில் புதிய தலைவர் குறித்து வெளியிடப்படும் என்று அந்நாட்டு மெஹிர் செய்தி ஊடகம் கூறியுள்ளது.
நிபுணர்களில் மூத்த சமயத் தலைவர் ஒருவரான ஆயதுல்லா மொஹ்சென் ஹெய்தாரி அலெகாசிர், உறுப்பினர்கள் ஒன்றுகூடி வாக்களிப்பதில் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளதால் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அமெரிக்காவும் அடையாளம் கண்டுள்ளதை அவர் பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினார்.
தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஈரானியத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் மகன் மொஸ்தபா காமெனி அடுத்த தலைவராகத் தேர்வு செய்யப்படுவதில் அமெரிக்க அதிபர் அண்மையில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில் அண்டை நாடுகளிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதால், தன் நாடு தாக்கப்படும்போது அதற்கு “பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்” ஈரான் இருப்பதாக அதன் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கூறியுள்ளார்.
சனிக்கிழமை (மார்ச் 7) ஈரானின் எண்ணெய்க் கிடங்குகள்மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுபற்றிய காணொளிகள் வெளியிடப்பட்டு, அவற்றில் கிடங்குகளில் இருந்து கிளம்பிய பெரும் தீப்பிழம்புகளால் செவ்வானம் தென்பட்டது.
ஈரானும் பதிலடியாக அதன் அண்டை நாடுகள்மீது ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்திவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடரும் தாக்குதல்
இந்நிலையில், குவைத்தின் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகள், பஹ்ரேனில் உள்ள சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றின்மீது ஈரான் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தாக்குதல் தொடுத்துள்ளது.
ஈரான் அதன் அண்டை நாடுகள்மீது தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏவுகணையும் ஆளில்லா வானூர்திகளையும் பாய்ச்சிவருகிறது.
கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு எல்லைப் பகுதி காவல் படை அதிகாரிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக குவைத்தின் உள்நாட்டு அமைச்சு தெரிவித்தது.
ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்ததை அடுத்து அண்டை நாடுகள் ஈரானால் தொடர்ந்து தாக்கப்படுகின்றன.
வளைகுடா நாடுகளின் தளங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா தன்னைத் தாக்கினால் ஈரான் பதிலடி கொடுத்துதான் ஆகவேண்டும் என்று ஈரானிய அதிபர் மசூது பெசெஷ்கியான் எச்சரித்தார்.

