தைப்பே: வர்த்தக உடன்பாடு குறித்து அமெரிக்காவுடன் ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகத் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 13) தைவான் தெரிவித்தது.
இதுதொடர்பாக இருதரப்பினரிடையே பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தைவானிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 32 விழுக்காடு வரி விதித்ததை அடுத்து, வர்த்தக உடன்பாட்டை எட்ட அமெரிக்காவும் தைவானும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கின.
அமெரிக்காவில் தைவான் கூடுதலாக முதலீடு செய்யும் என்றும் தைவானிய அதிபர் லாய் சிங் டே உறுதி அளித்துள்ளார். அத்துடன் தற்காப்புச் செலவுகளைத் தமது நாடு அதிகரிக்கும் என்றார் அவர்.
பேச்சுவார்த்தை, உடன்பாடு ஆகியவை தொடர்பான விவரங்கள் தைவானிய நாடாளுமன்றத்திடமும் பொதுமக்களிடமும் தெரிவிக்கப்படும் என்று தைவானிய வர்த்தகத்துறை அதிகாரிகள் கூறினர்.
பகுதிமின்கடத்தி உற்பத்தியில் தைவான் ஜாம்பவானாகத் திகழ்கிறது. இத்துறை தைவானியப் பொருளியலின் உயிர் நாடியாக உள்ளது.
அமெரிக்கச் சில்லு உற்பத்தித்துறைக்குத் தைவான் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
முக்கியத் தொழில்நுட்பக் கருவிகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் பிரிவு 232ன்கீழ் பகுதிமின்கடத்திகள் மற்றும் சில்லு உற்பத்திக் கருவிகள் தொடர்பாக அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியது.
2024ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான தைவானின் வர்த்தக உபரி 73.9 பில்லியன் அமெரிக்க டாலராகப் (S$95 பில்லியன்) பதிவானது.
தைவானிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலான பொருள்கள், பகுதிமின்கடத்திகள் உட்பட தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளாகும்.

