கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது குறித்து வரும் செப்டம்பர் 11ஆம் தேதி உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, அம்னோ கட்சி தனது தேசிய மாநாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், நஜீப்பின் விடுதலைச் செய்தி அக்கட்சிக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும்.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் தலைமையில் கூட்டப்படவுள்ள கூட்டரசுப் பிரதேசங்களின் பொது மன்னிப்பு மன்றக் கூட்டத்தில் நஜீப்பின் எதிர்காலம் குறித்த கோரிக்கை விவாதிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து பொது மன்னிப்பு மன்றத்தின் கூட்டக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி ஊழல் வழக்கின் துணை நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஜீப், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2024ல் அப்போதைய பொது மன்னிப்பு மன்றம் அவரது சிறைத் தண்டனையை பாதியாகக் குறைத்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைத்தது.
இருப்பினும், முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, நஜீப் தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க வகை செய்யும் கூடுதல் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக நஜீப் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு பொது மன்னிப்பு மன்றத்தில் விவாதிக்கப்படாததால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் 2025ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மலேசியச் சட்டத்தில் வீட்டுக் காவலுக்குச் சிறப்பு விதிகள் எதுவும் இல்லாத நிலையில், மாமன்னர் புதிய பொது மன்னிப்பு உத்தரவைப் பிறப்பிப்பதே சட்டப்பூர்வமாக வலுவான அடிப்படையாக இருக்கும் என்று ஆளுங்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.


