மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி: நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் தகவல்

மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி: நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் தகவல்

படம்: பெர்னாமா

03 Mar 2026 - 5:52 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் ஒன்றில் தொடர்புடைய ஒருவர், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் அரசு அமைப்புகளைச் சீர்குலைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த அனைத்துலக மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க சதித்திட்டம் நடப்பதாகக் கூறப்படுகிறது என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றும் கடந்த வாரம் காவல்துறை தெரிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தச் சதி குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பேரளவிலான ஊழல் விசாரணைக்கு உள்ளான நபர் ஒருவர், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அனைத்துலக மக்கள் தொடர்பு நிறுவனத்தைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

இருப்பினும், அந்த நபர் யார் அல்லது அந்த அனைத்துலக மக்கள் தொடர்பு நிறுவனம் எது என்பதை அன்வாரோ அல்லது காவல்துறையினரோ இதுவரை அடையாளப்படுத்தவில்லை.

ஊடக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த முயற்சி நடந்துள்ளது.

மலேசியாவில் 2028ஆம் ஆண்டின் தொடக்கத்துக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதுவரை இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டதாக அறியப்படுகிறது

அரசாங்கத்தின் முயற்சிகளை, குறிப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டு ஊடகங்களுடன் தொடர்புகொள்ள திட்டமிடப்பட்டதாகவும் திரு அன்வார் கூறினார்.

“அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்களின்படி, வெளிநாடுகளில் உள்ள தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மலேசிய அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கேள்விக் குறியாக்கும் ஒரு கதையை உருவாக்குவதும் மலேசிய நாடாளுமன்றத்தின் மூலம் ஓர் இயக்கத்தை ஒருங்கிணைப்பதும் அவர்களின் உத்தியாக இருந்தது. இதுவே எங்களின் கவலை,” என்று திரு அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் சதித்திட்டத்தின் இலக்குகளில் ஒன்றாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் இருந்ததாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மாலை நிலவரப்படி, மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்தல் மற்றும் நாட்டிற்குச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், அரச மலேசியக் காவல்துறை இரண்டு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்நாடாளுமன்றம்