அலோர் காஜா: அரசாங்கம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கும் நிதி, அங்கு வாழும் மக்களின் நலன்களுக்கானது.
அது அத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமைக்கானதல்ல என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளார்.
தொகுதியின் வசதிகளை மேம்படுத்தவும் அங்குள்ள மக்கள் வாழ்வின் தரத்தை உயர்த்தவும் தேவைப்படும் நிதியை வழங்குவதே அத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் விளக்கினார்.
மலாக்காவில் உள்ள மஸ்ஜித் அர்-ரஸ்யிதின் பள்ளிவாசலில் நடந்த தொழுகைக்குப் பிறகு அவர் இக்கருத்துகளை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
“உதவி நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்தான் வழங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
“தேவைப்பட்டால் அவற்றை நேரடியாக மக்களிடமே வழங்கமுடியும், ஏனெனில் அது மக்களுக்கானதாகும்,” என்றார் அவர்.
“உதாரணமாக, இரண்டு மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$624.7மில்லியன்) ஒதுக்கப்பட்டால் அத்தொகை பள்ளிகள், சமயப் பள்ளிகள், பள்ளிவாசல்கள், சாக்கடை பழுதுபார்ப்பு, உள்ளூருக்குத் தேவையான பலவகையான உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படவேண்டும்.
“அதனை நாங்கள் உறுதிசெய்வோம்,” என்று அவர் கூறினார்.
மலேசியப் பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் சுல்கிப்ஃலி ஹசான், மலாக்கா காவல்துறை தலைவர் டிசுல்கைஹிரி முக்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டுக்கான இந்தக் கொள்கை, நெடுநாள்களாக நடப்பில் உள்ள ஒன்று எனவும், அதனை அரசாங்கத்தில் சேவையாற்றிய உறுப்பினர்கள் நன்று அறிவார்கள் என்பதையும் திரு அன்வார் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி உறுப்பினர் நிலை
தொகுதியின் உறுப்பினர் தற்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றால் அந்நிதி நேரடியாக மக்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தொகுதிக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் அவர்களிடம் வரவிடாமல் தடை செய்கிறது என்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பிரதமர் கருத்துரைத்துள்ளார்.


