ஜக்கார்த்தா: குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவைக் குறிக்கும் வகையில் தரவரிசை முத்திரை பதிக்கும் இந்தோனீசிய சுகாதார அமைச்சின் புதிய கொள்கைமீது பயனீட்டாளர்கள், சிறு வணிகர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தப் புதிய திட்டம், முறையாக அமல்படுத்தப்படுமா, மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ஏப்ரலில் அமைச்சின் ஒழுங்குமுறையின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து முத்திரைக்கு ‘நியூட்ரி-லெவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உணவகங்கள், பானக் கடைகளில் புதிதாகத் தயாரிக்கப்படும் பானங்களின் பட்டியல்களில் இந்த முத்திரையைப் பயன்படுத்த அரசு வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு 100 மில்லி லிட்டர் பானத்திலும் உள்ள சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அவை கலந்துள்ள விழுக்காட்டின் அடிப்படையில் ‘ஏ’ முதல் ‘டி’ வரை தரவரிசை வழங்கப்பட்டு, அதற்கேற்ப வண்ணக் குறியீடுகளும் அச்சிடப்படும்.
இந்தப் புதிய தரவரிசையை 31 வயது ரிஸ்கி வரவேற்றாலும் துல்லியமாகவும் சீராகவும் அவற்றைச் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு உள்ளது.
ஏனெனில், துல்லியமான ஊட்டச்சத்து அளவைக் கண்டறிய முறையான ஆய்வகச் சோதனை தேவை. இதற்கு நிறுவனங்கள் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மேற்கு ஜாவாவின் டெபோக் நகரில் காப்பிக் கடை நடத்திவரும் 57 வயது சியாருல், சிறுவணிகர்கள் இதனைச் செயல்படுத்துவது கடினம் என்றார்.
இருப்பினும், தமது கடையில் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் சர்க்கரையின் அளவைத் தெரிவுசெய்யும் வசதியை நீண்டகாலமாக வழங்கிவருவதாக சியாரல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இந்த ‘நியூட்ரி-லெவல்’ கட்டாயமாக்கப்படவில்லை. இதற்கான முறையான சட்ட விதிமுறைகள் வரும்வரை வணிகர்கள் இம்மாற்றத்திற்குப் பழகிக்கொள்ள இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநர் சிட்டி நாடியா தர்மிசி இதுகுறித்துக் கருத்துரைத்தார்.
“இந்த முத்திரை, மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கான ஒரே தீர்வு அன்று. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு, இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இதன் நீண்டகால நோக்கமாகும். இத்தகைய நோய்கள் பொதுவாக முதியவர்களுக்கே ஏற்படும், ஆனால் இப்போது இளைஞர்களும் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
2019ஆம் ஆண்டு முதல் 2025 வரை, இந்தோனீசியாவில் சிறுநீரகச் செயலிழப்புச் சம்பவங்கள் 6 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. இதற்கான சிகிச்சைச் செலவு சுமார் 2 டிரில்லியன் ரூப்பியாவிலிருந்து (S$144 மில்லியன்) 13 டிரில்லியன் ரூப்பியாவாக உயர்ந்துள்ளது. பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய்க்கான செலவுகளும் இதேபோல் அதிகரித்துள்ளன.

