போராட்டத்தைத் தொடருங்கள்: முன்னாள் ஈரானிய இளவரசர் ரெஸா பஹ்லவி

போராட்டத்தைத் தொடருங்கள்: முன்னாள் ஈரானிய இளவரசர் ரெஸா பஹ்லவி

2 mins read
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அறைகூவல்
b02015a3-d2bb-4817-a558-ce809c916cf2
ஈரானின் கடைசி மன்னர் ஷாவின் மூத்த மகன் முகம்மது ரெஸா பஹ்லவியின் படத்தை ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஈரானில் ஆட்சி மாற்றம் கோரி ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: இபிஏ
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஈரானிலிருந்து கடந்த 1979ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த முன்னாள் இளவரசர் ரெஸா பஹ்லவி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஈரானியர்கள் ஆர்ப்பாட்டங்களைத் தீவிரமாகத் தொடரவேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அறைகூவல் விடுத்துள்ளார்.

ஈரானில் நடந்த புரட்சியால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஈரானிய மன்னர் ஷாவின் மூத்த மகன் ரெஸா பஹ்லவி ஆவார். ஜனநாயக முறைப்படி ஈரானை வழிநடத்த 65 வயதாகும் தன்னை அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய முதல் நாள் தாக்குதலில் ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைமைத்துவம் ‘அதன் கடைசி மூச்சை விடுவதாக’ அவர் தற்போதைய சூழலை வருணித்துள்ளார்.

அமெரிக்காவையே தமது இருப்பிடமாகக் கொண்டுள்ள அவர் இதுவரையில் ஈரானுக்குள் வந்ததில்லை.

இரண்டாம் நாளாக ஈரான்மீது தாக்குதல்கள் தொடரும் நிலையில், “இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி குறித்த உங்கள் ஆதரவை இரவு நேர முழக்கங்கள் மூலம் வெளிப்படுத்துமாறும் ஈரானின் எதிர்காலம் குறித்த உங்கள் கோரிக்கைகளை உரக்கக் கூறுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“உங்களது ஆதரவில்தான் எனது சக்தி உருவெடுக்கிறது,” என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டார்.

‘தீவிரவாத ஈரானியக் குடியரசின்’ மீதம் உள்ள அதிகாரிகள் ரத்தக்களரி இன்றி ஆட்சியைக் கைவிடுமாறு ஈரானிய ஆட்சியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஈரானுக்கு வெளியில் வாழும் ஈரானியர்களையும் அவர் தீவிரமாகக் குரல் எழுப்பி ஆட்சி மாற்றத்துக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்மன்னர்ஆர்ப்பாட்டம்போர்அமெரிக்கா