மீண்டும் மீண்டும் நிலவும் பிரச்சினையாகப் புகைமூட்டம் இருந்துவிடக்கூடாது: ஜி25 மலேசியா

மீண்டும் மீண்டும் நிலவும் பிரச்சினையாகப் புகைமூட்டம் இருந்துவிடக்கூடாது: ஜி25 மலேசியா

படம்: ஏஎஃப்பி

11 Oct 2026 - 7:00 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: தென்கிழக்காசிய மக்கள் மீண்டும் மீண்டும் நிலவும் புகைமூட்டம் பிரச்சினையைச் சகித்துக்கொண்டு, காற்றைச் சுத்திகரிக்கப் பருவமழையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலை ஏற்படக்கூடாது என்று மலேசியாவின் ஜி25 சமூக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காட்டுத்தீக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது குரல் எழுப்பியுள்ளது.

சேதங்களுக்கான இழப்பீட்டை அவர்கள் செலுத்துவதை உறுதிசெய்வது உட்பட, ஆசியான் அரசுகள் தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

“புகைமூட்டத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொள்ளக்கூடாது,” என்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்ட அறிக்கையில் ஜி25 மலேசியா தெரிவித்தது.

பத்தாண்டு கால வட்டார ஒத்துழைப்பு மற்றும் அரசாங்கங்களின் தொடர் வாக்குறுதிகளுக்கு மத்தியிலும் இச்சிக்கல் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜி25 மலேசியா, அந்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வருகின்றன என்ற கேள்வியை இது எழுப்புகிறது என்று குறிப்பிட்டது.

இப்போது தேவைப்படுவது வாக்குறுதிகள் அல்ல என்றும் அதற்கு மாறாக, வலுவான அமலாக்கம், தெளிவான பொறுப்பேற்பு மற்றும் களத்தில் கண்கூடான முன்னேற்றங்கள் மட்டுமே என்று அது உறுதியாகத் கூறியது.

புகைமூட்டம் என்பது வெறும் சுற்றுப்புறக் கோளாறு மட்டுமல்ல என்று அமைப்பு கூறியது. அது பொது சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி, கல்வி மற்றும் பொருளியல் நடவடிக்கைகளைப் பாதிப்பதுடன், அரசுகளுக்கும் வர்த்தக அமைப்புகளுக்கும் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துவதை அது சுட்டியது.

குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாச, இதய நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் புகைமூட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசாங்கங்கள் புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளை வெறும் சுற்றுப்புறக் கடமையாக மட்டும் பார்க்காமல், பொதுச் சுகாதாரத்துக்கான முதலீடாகக் கருத வேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்