அமெரிக்க தற்காப்பு அமைச்சர்மீது தொடரும் புகார்கள்

2 mins read
2fcf9aed-6358-4aae-986b-eea61863723e
அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன.

அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முக்கியமாக இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஹூதி போராளிகளைக் குறிவைத்து ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை ‘சிக்னல்’ சமூக ஊடகத்தில் அமைச்சர் பீட் ஹெக்சத் பகிர்ந்தது அதில் ஒன்று.

போதைப்பொருள் இருந்த உல்லாசப் படகுமீது ஆயுதத் தாக்குதல் நடத்தி அதில் இருந்த கடத்தல்காரர்கள் முதலில் உயிர்பிழைத்து பிறகு மாண்டது அடுத்த குற்றச்சாட்டு.

ஏற்கெனவே அவரை செனட் சபை மிகவும் குறைந்த வாக்குகளுடன் நியமனம் செய்தது ஒரு பின்னடைவாகவே அவருக்கு அமைந்தது. அறநிறுவனத்தில் பணியாற்றியபோது நடந்த நிதிநிர்வாகப் பிரச்சினை, கலிபோர்னியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள், அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் என அவர்மீது தொடர்ந்து புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரியாகவும் ஃபாக்ஸ் செய்தி ஊடகத்தில் நெறியாளராகவும் பணியாற்றியவர். அதிபர் டோனல்ட் டிரம்ப் திரு ஹெக்சத் மீது வைத்துள்ள நம்பிக்கையே அவரைப் பதவியில் தொடரவைத்துள்ளது என்று பார்வையாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

“அவர் ஒரு சிரமமான சூழ்நிலையில் தவிக்கிறார். அவரது இருபெரும் பிரச்சினைகள் தற்போது வெளிவந்துள்ளன. குடியரசுக் கட்சியினர் சிலரின் ஆதரவை அவர் இழந்திருந்தாலும் அதிபரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்,” என்று அமெரிக்க கடற்படையில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள மார்க் கன்சியன் கூறினார்.

ஐரோப்பிய மற்றும் நேட்டோ தற்காப்பு அமைப்புக்கான முன்னாள் துணைச் செயலாளர் ஜிம் டவுன்சென்ட், “அதிபருக்குத் தலைவலியைக் கொடுக்கும் தற்காப்பு அமைச்சர் அமைந்துள்ளார்,” என்று கூறியுள்ளார். உடனடியாகப் பதவி இழக்கும் நிலை இல்லை என்றாலும், குடியரசுக் கட்சிக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டால் திரு ஹெக்சத் பதவிமாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றார் திரு ஜிம்.

குறிப்புச் சொற்கள்