பிரசல்ஸ்: வரும் வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க முற்பட்ட பாலஸ்தீன அதிகாரிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விசா வழங்க அமெரிக்கா மறுத்தமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னதாக பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், அவரது குழுவில் உள்ள பிற உறுப்பினர்களுக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த வாரம் தெரிவித்திருந்தது.
“பாலஸ்தீனக் குழுவின் உறுப்பினர்களுக்கான நுழைவு விசாவை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மறுக்கும் முடிவை நீட்டித்துள்ளது வருத்தமளிக்கிறது,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசதந்திர சேவைக்கான செய்தித் தொடர்பாளர் அன்வர் எல் அனுனி கூறினார்.
“ஐநாவுடனான அதன் தற்போதைய தலைமையக ஒப்பந்தங்களையும் அந்த அமைப்பை வழிநடத்தும் நாடு என்ற முறையிலும் அமெரிக்கா தனது கடமைகளைக் கருத்தில்கொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், பாலஸ்தீனக் குழுவிற்கு விசா மறுத்ததால், ஐநா பொதுச்சபையின் வழக்கமான பங்கேற்பாளரான திரு அப்பாஸ், காணொளி வாயிலாக உரையாற்றும் கட்டாயத்திற்கு ஆளானார்.
இந்த ஆண்டும் அப்பாஸ் காணொளி வாயிலாகப் பங்கேற்க அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச்சபையில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற வாக்கெடுப்பில் 152-3 என்ற கணக்கில் ஆதரவாக வாக்குகள் பதிவாகின.
தற்போதைய நிலவரப்படி, செப்டம்பர் 22ல் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஐநாவிற்கான பாலஸ்தீனத் தூதரகத்தின் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
வாஷிங்டனின் இந்த முடிவு குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசு முழுமையாகப் பங்கேற்பதற்கு இத்தகைய நடவடிக்கை இடையூறு என்பதால் தாம் கவலையடைவதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலியர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட சிறையில் அடைக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் குடும்பங்களுக்கு வழக்கமாக வரும் நிதியுதவிகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குற்றவியல் நீதிமன்றம், அனைத்துலக நீதிமன்றம் ஆகியவற்றின்மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை பாலஸ்தீனம் அனைத்துலகமயமாக்க முயல்வதாகக் அமெரிக்க வெளியுறவுத் துறை சாடியுள்ளது.
அத்துடன், நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து ஒருதலைச்சார்பு அங்கீகாரத்தைப் பாலஸ்தீனம் பெற முயல்வதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறுகிறது.
மேலும், பாலஸ்தீனர்கள் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து உதவித்தொகை வழங்கி வருவதாகவும் பொது அறிவிப்புகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதச் செயல்களையும் பயங்கரவாதிகளையும் பெருமைப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் அண்மை மாதங்களில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், திரு அப்பாஸுக்கு நுழைவு விசா மறுக்கும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
