லெபனான் மீது தொடரும் குண்டுமழை; அமைதிப்படையினர் குறித்து ஐநா கவலை

1 mins read
3388b16c-c05c-4d89-98e1-4f49af9200fc
இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தென்லெபனானில் உள்ள கிராமங்கள் சேதமடைந்தன. - படம்: ஏஎஃப்பி

பெய்ருட்: ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

லெபனான் மீது இஸ்‌ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.

லெபனானின் வடக்குப் பகுதி மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் மாண்டதாக லெபனானிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

அதே சமயத்தில் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகளைப் பாய்ச்சி வருகிறது.

இதற்கிடையே, லெபனானுக்குள் இஸ்‌ரேலிய ராணுவம் புகுந்து தாக்குதல்கள் நடத்துகிறது.

அண்மையில் லெபனானில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவன அமைதிப்படை முகாமுக்குள் இஸ்‌ரேலியக் கவச வாகனங்கள் நுழைந்தன.

அதுமட்டுமல்லாது, லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பேக்கா பள்ளத்தாக்கு, தலைநகர் பெய்ருட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், தென்லெபனான் ஆகிய இடங்களில் இஸ்‌ரேலியப் படையினருக்கும் ஐநா அமைதிப்படையினருக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லெபனானில் உள்ள அமைதிப்படையினரின் பாதுகாப்பு குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள அமைதிப்படையினரில் பெரும்பாலானோர் இத்தாலிய மற்றும் இந்தோனீசிய ராணுவத்தினர்.

லெபனானிலிருந்து ஐநா அமைதிப்படையினர் வெளியேற வேண்டும் என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கேட்டுக்கொண்டார்.

அவர்கள் அங்கிருப்பதால் ஹிஸ்புல்லா போராளிகள் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை என்றார் அவர்.

இதற்கிடையே, தென்லெபனானில் உள்ள 25 கிராமங்களிலிருந்து வெளியேறுமாறு அங்குள்ள கிராமவாசிகளுக்கு இஸ்‌ரேல் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்லெபனான்ஐநா