மலேசியாவில் தொடரும் காசநோய் தொற்று

மலேசியாவில் தொடரும் காசநோய் தொற்று

2 mins read
2bb56c84-ed5a-4d19-b2db-f7e61c2c7456
மலேசியாவில் உள்ள ரமலான் சந்தைகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவில் காசநோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி அமைச்சு அறிவுறுத்தியது.

தொற்றுக் கண்டறியப்பட்ட ஆறாவது வாரத்தில் 596 புதிய காசநோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,161ஆனது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ரமலான் சந்தை போன்ற கூட்டமான, அடைப்பட்ட, அதிக காற்றோட்டம் இல்லாத இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அமைச்சு கூறியது. நோன்புத் துறக்க பெரிய குழுக்கள் ஒன்றுகூடும்போதும் காசநோய் பரவ வாய்ப்பிருப்பதாக அது சுட்டியது.

காசநோயைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் முன்கூட்டியே தொற்றைக் கண்டறியவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியலாம். அறிகுறிகள் நீண்டகாலம் நீடித்தால் மருத்துவரை உடனடியாக நாடுவது சிறப்பு என்று அமைச்சு வலியுறுத்தியது.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரப்படி, சாபாவில் அதிகமான காசநோய் சம்பவங்கள் பதிவாகின. அங்கு மொத்தம் 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் 596 பேரும் சராவாக்கில் 332 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோகூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 280.

இதற்கிடையே, ஜோகூரில் உள்ள ரமலான் சந்தைகள் அனைத்தும் முந்தைய ஆண்டுகளைப் போல வழக்கம்போல செயல்படும் என்று மாநிலச் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் டியென் சூன் அறிவித்தார்.

சந்தையில் உள்ள வர்த்தகர்களும் உணவு விற்பனையாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.

எனினும், உணவு விற்பனையாளர்களும் வர்த்தகர்களும் ‘டைபாய்ட்’ தடுப்பூசியைப் போட்டிருக்கவேண்டும் என்றார் அவர்.

நடைமுறையில் உள்ள விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்க ஜோகூர் மாநிலச் சுகாதாரத் துறை தயங்காது என்று திரு லிங் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்