ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்ட சில நோய்கள் மறு எழுச்சி பெற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்நாட்டு அரசாங்கத்தின் பலவீனமான நோய்த்தடுப்புக் கொள்கையே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்த அவர்கள், கடந்த எட்டு மாதங்களாக இந்தோனீசியாவின் பல பகுதிகளில் தட்டம்மை நோய் பரவியதே அதற்குச சான்று எனக் குறிப்பிட்டனர்.
மிக எளிதில் மனிதர்களிடையே பரவக்கூடிய நோயான தட்டம்மை 2021ஆம் ஆண்டு வரை இந்தோனீசியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நோயாக இருந்தது.
ஆனால், கடந்த ஜனவரி முதல் ஜகார்த்தா, பான்டென், கிழக்கு ஜாவாவின் சுமெனெப் பகுதி உட்பட குறைந்தது 42 வட்டாரங்களில் கிட்டத்தட்ட 3,500 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் இதுவரை சுமெனெப்பில் மட்டும் தட்டமைக்கானத் தடுப்பூசி செலுத்தப்படாத 20 சிறார்கள் உயிரிழந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு சொன்னது.
2014ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
2024ஆம் ஆண்டில் மத்திய ஜாவா, கிழக்கு ஜாவா, ஜகார்த்தா பகுதிகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.