பெட்டாலிங் ஜெயா: பண்டைய ரோமானியர்கள், மலாய் மாலுமிகளிடமிருந்தே கப்பல் கட்டும் கலையைக் கற்றுக்கொண்டனர் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பேராசிரியர் சொலேஹா யாக்கூப்பை மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (IIUM) பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அவரது சேவை முடிக்கப்பட்டுவிட்டதாகப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியையோ அதன் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ அடையாளத்தையோ பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகள், விளம்பரங்கள், வெளியீடுகள், சமூக ஊடகப் பதிவுகள் உட்பட எதிலும் பல்கலைக்கழகத்தின் பெயரை அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தக்கூடாது.
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகத்தின் நேர்மையைப் பேணவும் பொதுமக்களிடையே எழும் குழப்பங்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியது.
முன்னதாக, 2025 நவம்பரில் ரோமானியர்கள், மலாய்க்காரர்களிடம் கப்பல் கட்டக் கற்றுக்கொண்டதாகக் கூறிய சொலேஹா, கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கடாரத்தின் இரும்புத் தாது வளம் விண்கல் மழையால் தோன்றியிருக்கலாம் எனக் கூறி கல்வி உலகிலும் பொதுமக்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.


