தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சல்வார் கமீஸ் அணிந்தவர் சிலைமீது கால்வைத்து மாம்பழம் பறித்த சம்பவத்தால் சர்ச்சை

1 mins read
3176f18c-f7cd-4ba7-bbcb-64ec9632be82
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியில் இரு பெண்கள் மாம்பழம் பறிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது. - படங்கள்: இணையம்

பேங்காக்: தாய்லாந்தில் சிலை ஒன்றின் மீது ஏறி மாம்பழங்கள் பறித்த இரண்டு பெண்கள், அந்நாட்டின் கலாசாரத்தை அவமதித்ததாகத் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. 

சல்வார் கமீஸ் அணிந்திருந்த ஒரு பெண், தாய்லாந்துக் கோயிலில் உள்ள ஒரு சிலைமீது கால்வைத்து ஏறியது போன்று அமைந்த காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து இணையவாசிகள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலைமீது ஏறிய அந்தப் பெண்ணுடன் இன்னொரு பெண்ணும் நெகிழிப் பை ஒன்றைப் பிடித்தவாறு அருகில் இருந்ததாகத் தெரிகிறது. கோயில் மரம் ஒன்றிலிருந்து மாம்பழங்கள் பறிப்பதற்காகச் சிலையை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இருவருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர்.

காணொளி டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து மற்ற சமூக ஊடகத் தளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக் கோயிலில் மாம்பழங்கள் பறித்தது சட்டரீதியாகத் தண்டிக்கப்படக்கூடிய செயலா அல்லது நெறிமுறை அற்றதா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்புவதாக ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

பழம் பறித்தவர் பிரிட்டிஷ்/கனடிய சுற்றுப்பயணி என்று ஒரு பயனர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டார். இதற்கிடையே, இரு பெண்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சமூக ஊடகவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

பௌத்த சமயம் சார்ந்த 14ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான அந்தக் கோயிலில் மரியாதையற்று நடந்துகொண்டதாக அந்தப் பெண்களின் செயலைக் கண்டித்துள்ள ஓர் இணையவாசி, அவர்களை அவ்விடத்திற்கு மீண்டும் வராதவாறு தடைவிதிக்கக் கேட்டுக்கொண்டார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்