தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவழி எல்லைக்கு அருகே லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை மறுக்கும் ஜோகூர் காவல்துறை

2 mins read
e7103883-92fb-4720-88e6-9dd4d2120506
சம்பவம் பதிவானதாகக் கூறப்படும் படம் (இடது). - படங்கள்: சமூக ஊடகம் / மதர்‌ஷிப்

ஜோகூர் பாரு: சிங்கப்பூரை நோக்கிய நிலவழி எல்லை சோதனைச்சாவடிக்கு அருகே ஜோகூர் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக சனிக்கிழமை (ஜனவரி 18) இணையத்தில் சர்ச்சை எழுந்த வேளையில், மலேசியக் காவல்துறை அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்துள்ளது.

அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து காவல்துறையினர் லஞ்சம் பெற்றதைக் காட்டுவதாகக் கூறப்படும் படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது.

இக்குற்றச்சாட்டை தாம் கடுமையாகக் கருதுவதாக ஜோகூர் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ராவ்ப் செலாமாட் கூறினார். அதேவேளை, லஞ்சம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘சிங்கப்போரியன்ஸ் கைட் டு ஜேபி’ ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16) பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தில், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூரை நோக்கிய சாலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஒரு காருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது தெரிந்தது.

அப்படத்தைப் பதிவேற்றம் செய்தவர், அந்த அதிகாரி வாகன ஓட்டுநரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகப் பதிவிட்டார்.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்துக்கு அருகே 500 மீட்டருக்கு அப்பால் சிங்கப்பூரை நோக்கிய சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததென திரு ராவ்ப் கூறினார்.

அப்போது வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சமோ எவ்வித பொருளையோ பெற்றுக்கொள்ளவில்லை என்று பணியில் இருந்த அதிகாரிகள் கூறியதாக திரு ராவ்ப் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகள் ஆராயப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்களை அடையாளம் காணும் முற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் விதமாக பொய்த் தகவலைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என திரு ராவ்ப் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்