ஜோகூர் கடைகளில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு

2 mins read
1dd02c0c-62a0-4c75-a1a8-346ee5b39dff
லார்க்கின், தம்போய், பாசிர் குடாங், கூலாய் ஆகிய பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகள், பேரங்காடிகள் ஆகியவற்றுக்கு தி ஸ்டார் நாளிதழைச் சேர்ந்த செய்தியாளர்கள் சென்று பார்த்தபோது அவ்விடங்களில் 1 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எண்ணெய் இல்லாதது தெரியவந்தது. - படம்: தி ஸ்டார்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 1 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எண்ணெய் புட்டிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

லார்க்கின், தம்போய், பாசிர் குடாங், கூலாய் ஆகிய பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகள், பேரங்காடிகள் ஆகியவற்றுக்கு தி ஸ்டார் நாளிதழைச் சேர்ந்த செய்தியாளர்கள் சென்று பார்த்தபோது அவ்விடங்களில் 1 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எண்ணெய் இல்லாதது தெரியவந்தது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் செம்பனை எண்ணெய் இருப்பில் இல்லை என்று கடைக்காரர்கள் கூறினர்.

சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் 1 கிலோ மற்றும் 2 கிலோ செம்பனை எண்ணெய் புட்டிகள் விநியோகத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திவிட்டதால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடைகளில் போதுமான சமையல் எண்ணெய் இல்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

“ஒரு கிலோ செம்பனை எண்ணெயின் விலை ஏறத்தாழ 6.90 ரிங்கிட் (S$2.08). 2 கிலோ எண்ணெயின் விலை 12.70 ரிங்கிட். தற்போது வேர்க்கடலை எண்ணெய், கனோலா எண்ணெய், சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இருப்பில் உள்ளன. ஆனால் அவற்றின் விலை செம்பனை எண்ணெயைவிட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். மானியம் வழங்கப்பட்ட 2.50 ரிங்கிட் சமையல் எண்ணெய் பொட்டலங்கள் இருப்பில் உள்ளன,” என்று ஜோகூரில் மொத்த விற்பனை, பலசரக்குக் கடை வைத்திருக்கும் திரு வோங் கொக் வாய் கூறினார்.

சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் செம்பனை எண்ணெய் தட்டுப்பாடு நாடு தழுவிய பிரச்சினை என்றார் ஜோகூர் மளிகைப்பொருள், பலசரக்கு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளருமான திரு வோங்.

செம்பனை எண்ணெயின் விலை முன் இல்லா அளவுக்கு அதிகரித்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்