ஈப்போ: பேராக் மாநிலத்தில் உள்ள சில ஆலயங்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட்டும் அங்கு குடிபெயர மறுக்கும் ஆலயத் தரப்பினரின் போக்கு தமக்கு கவலை அளிப்பதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு தாம் எவ்வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
பேராக்கில் அரசாங்க நிலங்களில் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு சுமூகமான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பிற்கு பெரும்பாலான ஆலய நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதால், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் முறையாக கிடைத்து வருகின்றன.
ஆனால், சில ஆலய நிர்வாகத்தினர், வழங்கப்பட்ட புதிய இடத்திற்குச் செல்லாமல் முரண்டு பிடித்து வருவதால், மாநிலத்தில் உள்ள 55 ஆலயப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக சிவநேசன் கூறினார்.
எனவே, மாநிலத்தில் எந்த ஆலயமும் உடைபடாமல் இருப்பதற்கு மாநில அரசாங்கத்தின் மூலம், தாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மே 21ஆம் தேதியன்று, ஈப்போவில் உள்ள ஐந்து ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன் அதனைக் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

