மலேசிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை: $5 பில்லியன் ரொக்கம், சொத்து மீட்பு

மலேசிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை: $5 பில்லியன் ரொக்கம், சொத்து மீட்பு

2 mins read
ஊழலுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள் மலேசிய ஊழல் குறியீட்டில் நல்ல தரநிலையை அடைய உதவியுள்ளது
5eb7c0aa-69b4-48aa-8aa0-647d8fd2a99c
செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மலேசிய நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பிரதமர் அன்வார் ஊழலுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்கினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: அரசாங்க அமைப்புகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட S$5 பில்லியனுக்கும் (RM15.5 பில்லியன்) மேற்பட்ட மதிப்புள்ள ரொக்கமும் சொத்துகளும் மலேசியாவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளைவிட 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரையில் அரசாங்க அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இந்த அளவு ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN), அரச மலேசிய சுங்கத் துறை, மலேசியக் காவல்துறை, உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு, மலேசியக் கடல்துறை அமலாக்க முகவை (MMEA), மலேசிய மத்திய வங்கி ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஒவ்வொரு வழக்கிலும் அனைத்து அமைப்புகளும் சம்பந்தப்படவில்லை. மாறாக பெரிய அளவிலான விவகாரங்களில் அவை ஒன்றிணைந்து செயலாற்றின என்று திரு அன்வார் விளக்கினார்.

முந்தைய ஆண்டுகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் 2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கண்டிராத அளவில் அமைப்புகள் செயல்பட்டுள்ளன என்று நாடாளுமன்றக் கேள்வி நேரத்தில் பிரதமர் அன்வார் கூறினார்.

உதாரணமாக 2018ல் 37 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டில் அது 1.2 பில்லியன் ரிங்கிட் என உயர்வு கண்டது. அதேசமயம் 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரையில் கைப்பற்றப்பட்ட மொத்த ரொக்கம், சொத்துகளின் மதிப்பு 15 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சருமான திரு அன்வார் விவரித்தார்.

ஊழலுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள் மலேசிய ஊழல் குறியீட்டில் நல்ல தரநிலையை அடைய உதவியுள்ளது. அதனை நிலைநாட்ட அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் பலகாலமாகக் குற்றக்கும்பல்கள் செயல்பட்டு வந்துள்ளன. அவற்றின்மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதனால்தான் அவற்றை முறியடிக்க முடிந்தது என்றார் பிரதமர் அன்வார்.

அமலாக்க அமைப்புகள் தளர்வு அடையாமல் வலுப்பெற்று மக்கள் நம்பிக்கையைப் பெற அரசாங்கம் பணியாற்றிவருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்