ஜோகூர் பாரு: ஜோகூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்மீது நடத்தப்பட்ட திடீர்ச் சோதனை நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் ஒன்பது பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஐந்து துப்பாக்கிகளையும் 136 தோட்டாக்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மாநிலக் காவல்துறையினரும் புக்கிட் அமானைச் சேர்ந்த அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாரு, ஸ்ரீ அலாம், கோத்தா திங்கி ஆகிய பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டாதுக் கமாருல் ஸமான் மாமாட் கூறினார்.
“22 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆடவர்களையும் மூன்று பெண்களையும் கைதுசெய்துள்ளோம். அவர்களில் மூவர் சகோதரர்கள்,” என்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சந்தேகப் பேர்வழிகளில் இருவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் உறுதிசெய்யப்பட்டது.
கூடுதல் விசாரணைக்குப் பிறகு ஆறு பேர், போதைப்பொருள், குற்றச்செயல்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் முன்னர் ஈடுபட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் 27.5 கிலோகிராம் கஞ்சா, 1.81 கிலோகிராம் ஹெராயின், 353 எக்ஸ்டசி மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களைக் கைப்பற்றியதாகத் திரு கமாருல் ஸமான் கூறினார்.
மேலும், மோட்டார்சைக்கிள், நான்கு கார்கள், ஆபரணங்கள், 126,000 ரிங்கிட் ரொக்கம் எனச் சந்தேக நபர்களின் உடைமைகளையும் 111 கள்ள சிகரெட் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது நடைபெறும் விசாரணையில் உதவ, சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.