பெட்டாலிங் ஜெயா: கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் நால்வரை மலேசியக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவம் ஜோகூர் பாருவின் ஸ்கூடாயில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு நிகழ்ந்தது.
அத்துடன், பெண் ஒருவர் உட்பட, 25 முதல் 43 வயதிற்குட்பட்ட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷுகைலி ஸைன் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி காலை 11 மணிக்கு சைபர்ஜெயா அருகே மாஜு விரைவுச்சாலை சுங்கச்சாவடியை ஒட்டிய பகுதியில் சீன ஆடவர் ஒருவரையும் உள்ளூர்ப் பெண் ஒருவரையும் கடத்திய சம்பவத்தில் அக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றும் திரு ஷுகைலி கூறினார்.
கடத்தப்பட்ட அவ்விருவரும் பின்னர் ஜூலை 15ஆம் தேதி மாலையில் நெகிரி செம்பிலானுக்குச் செல்லும் பெடாஸ் - லிங்கி சாலையோரப் பகுதியில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சீன ஆடவரின் சகோதரர் 1,161,127 அமெரிக்க டாலர் (5,457,290 ரிங்கிட்) மின்னிலக்கப் பணத்தைப் பிணைத்தொகையாக வழங்கிய பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
“புலனாய்வு, விசாரணை மூலம் சந்தேகப் பேர்வழிகளைக் காவல்துறை அடையாளம் கண்டது.
“இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11.25 மணிக்கு, சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் ஜோகூரின் ஜாலான் ஸ்கூடாய் - கேலாங் பத்தா பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்றதைக் காவல்துறை கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“காவல்துறை தன்னைப் பின்தொடர்வதை அறிந்ததும் அந்தச் சந்தேகப் பேர்வழி காவல்துறை காரை நோக்கிச் சுட்டார். காவல்துறையினர் பலமுறை திருப்பிச் சுட்டதில் அந்த 51 வயது ஆள் மாண்டுபோனார்,” என்று திரு ஷுகைலி, வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
மற்ற மூவரும் நள்ளிரவு 12.05 மணிக்கு ஸ்கூடாயின் தாமான் இமாஸ் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின்போது கொல்லப்பட்டதாகத் திரு ஷுகைலி தெரிவித்தார்.
“காவல்துறையினர் அவ்வீட்டிற்குச் சென்று, தாங்கள் வந்துள்ளதைத் தெரிவித்தும் ஒருவரும் கதவைத் திறக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவ்வீட்டிற்குள் நுழைந்ததும் உள்ளிருந்தவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டனர். காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் 35, 39 மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஆடவர் மூவர் கொல்லப்பட்டனர்,” என்று அவர் விவரித்தார்.
அவ்வீட்டிலிருந்து ஒரு வெட்டுக்கத்தியையும் இரு கைத்துப்பாக்கிகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அக்கும்பலுக்கு ஒரே ஒரு கடத்தல் வழக்கில் மட்டுமே தொடர்பிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் குறிப்பிட்ட திரு சுகைலி, அவர்கள் பெற்ற பிணைத்தொகையைத் தேடி மீட்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் சொன்னார்.

