ஜோகூர் ஆயுதந்தாங்கிய கொள்ளைச் சம்பவங்கள்: மின்னல் வேகத்தில் குற்றவாளி கைது

1 mins read
b90b6988-a56c-413c-9bde-95b29188b776
கைது செய்யப்பட்ட 40 வயது ஆடவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் உட்பட பல்வேறு பொருள்கள் மீட்கப்பட்டன. - கோப்புப் படம்: ஊடகம்

கூலாய்: ஜோகூரில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய கொள்ளைச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் காவல்துறை இரண்டு மணி நேரத்தில் கைது செய்தது.

ஜாலான் ஸ்ரீபுத்ராவில் இந்தோனீசியப் பெண் சம்பந்தப்பட்ட கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) காலை 8.26 மணிக்குத் தங்களுக்குக் தகவல் கிடைத்ததாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி டான் செங் லீ கூறினார்.

அந்தச் சம்பவத்தில் 52 வயதான அந்தப் பெண்ணின் இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே நாள் காலை 8.45 மணியளவில் ஜாலான் இம்பியன் சினாய் உத்தாமாவில் ஆயுதம் தாங்கிய கொள்ளை நிகழ்ந்தது தொடர்பாக 36 வயது மலேசியப் பெண் புகார் அளித்தார்.

விரைந்து செயல்பட்ட அதிரடிப் படையினர் காலை 10.05 மணியளவில் ஜாலான் ஸ்கூடாய்-கெலாங் பாத்தாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருந்த சந்தேக நபரைக் கைது செய்தனர்.

40 வயதான அந்த ஆடவர் ஏப்ரல் 4ஆம் தேதி கூலாயில் நிகழ்ந்த இரு கொள்ளைச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக திரு டான் கூறினார்.

அவரிடம் இருந்து யமஹா மோட்டார் சைக்கிள், பல்வேறு கைப்பைகள், கைப்பேசிகள், இந்தோனீசிய கடவுச்சீட்டு, மோதிரம், தங்கக் கைக்காப்பு போன்றவை மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்