மலேசிய சுற்றுப்புறப் பிரிவின் முக்கிய அதிகாரிமீது ஊழல் குற்றச்சாட்டு

மலேசிய சுற்றுப்புறப் பிரிவின் முக்கிய அதிகாரிமீது ஊழல் குற்றச்சாட்டு

1 mins read
212ca483-9c8e-4b54-a85f-a03fa35b211a
கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நூர்ஹஸ்னி. - படம்: என்எஸ்டிபி

கோலாலம்பூர்: மலேசிய சுற்றுப்புறப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரிமீது ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 21,000 ரிங்கிட்டை அவர் கையூட்டு பெற்றதாக வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

நீதிபதி அஸுரா ஆல்வி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அதை 59 வயதான அவர் மறுத்தார்.

தமது பணிகளுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து 21,000 ரிங்கிட்டை ஆறு பரிவர்த்தனைகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

அனைத்து குற்றச்செயல்களும் 2022 ஏப்ரல் 18 முதல் 2024 ஏப்ரல் 19 வரை புக்கிட் பிந்தாங்கில் உள்ள வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத் துணை வழக்கறிஞர் அஹமட் அக்ரம் காரிப், இரு தரப்பும் 25,000 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க சம்மதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே வழக்கு முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டவரின் கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

நூர்ஹஸ்னியைப் பிரதிநிதிக்கும் ஹரேஷ் மகாதேவன், வரும் ஜூன் மாதத்தில் ஜெனிவா, சுவிட்சர்லாந்தில் வேலை தொடர்பான கூட்டம் இருப்பதால் அதில் கலந்துகொண்ட பிறகு தனது கட்சிக்காரர் கடவுச்சீட்டை ஒப்படைப்பார் என்று கூறினார்.

இந்த வழக்கு மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடவுச்சீட்டை உடனடியாக ஒப்படைக்க நூர்ஹஸ்னிக்கு உத்தரவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்