ஊழல் குற்றச்சாட்டு: நேப்பாளத்தின் முன்னாள் பிரதமருக்குக் கைதாணை

ஊழல் குற்றச்சாட்டு: நேப்பாளத்தின் முன்னாள் பிரதமருக்குக் கைதாணை

2 mins read
79 வயதான தேவுபா மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.
b7f5a6ca-7a69-48c1-8332-65ddc921b476
நேப்பாளத்தின் பிரதமராக ஐந்து முறை தேர்வு செய்யப்பட்டவர் ஷேர் பகதூர் தேவுபா. - படம்; ஷேர் பகதூர் தேவுபா/ஃபேஸ்புக்
multi-img1 of 2

காத்மாண்டு: நேப்பாளத்தின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அறிக்கை வெளியானது.

79 வயதான தேவுபா மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

“கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாக என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது, நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை,” என்று தேவுபா சமூக ஊடகம்வழி தெரிவித்துள்ளார்.

தமது குடும்பத்தின் சொத்துகளை மையப்படுத்தி பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நேப்பாளத்தின் ஜனநாயக வளர்ச்சிக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

திரு தேவுபா நேப்பாளத்தின் பிரதமராக ஐந்து முறை தேர்வு செய்யப்பட்டவர். அவர் நேப்பாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

இதற்கிடையே, திரு தேவுபாவின்மனைவிக்கும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்சுரானா தேவுபா இதற்கு முன்னர் நேப்பாளத்தின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

அவர்மீதும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு தேவுபாவும் அவரது மனைவியும் நீண்டகால மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்மையில்,நேப்பாள ஊடகங்கள் திரு தேவுபாவும் அவரது மனைவியும் சிங்கப்பூரில் இருப்பதாகத் தகவல் வெளியிட்டன. இதையும் காவல்துறை விசாரித்து வருகிறது.

நேப்பாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புரட்சி வெடித்தது. அதன்பிறகு நடந்த தேர்தலில் ‘ராப்’ பாடகர் பலேந்தர‌ ‌‌‌ஷா, 35, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமே‌ஷ் லெக்ஹாக், முன்னாள் எரிசக்தி அமைச்சர் தீபக் கட்கா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்