ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டப் பிரச்சினை காரணமாக தென்கிழக்காசிய நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தோனீசியாவின் பேரிடர் மீட்புப் பணிகளுக்கான அவசரகால நிதியில் முறைகேடு செய்ததாக நாட்டின் பேரிடர் மேலாண்மைத் தலைவரின் தம்பி பீமா செத்யாவான் உட்பட ஐந்து பேரை அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
இந்தோனீசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் புதன்கிழமையன்று (அக்டோபர் 14) இந்தச் சந்தேக நபர்களைக் கைது செய்தது. முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 13) தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பில் பொருள்கள், சேவைகளைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவசரகால நிதியை வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் அமைப்பின் அதிகாரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே கூட்டுச் சதி நடந்ததற்கான சான்றுகளைப் புலனாய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் சேத்யோ புடியாந்தோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டில் சிலர் சுயலாபத்துக்காக முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை முக்கியமாகத் தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பின் அவசரகால நிதியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. பேரிடர் காலங்களில் அத்தியாவசியப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றை உடனடியாகக் கொள்முதல் செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கு இந்த அவசரகால நிதிக்காக ஏறத்தாழ 4.62 டிரில்லியன் ரூப்பியா (S$330 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நீடிக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி இதில் அடங்குமா என்பதை ஊழல் ஒழிப்பு ஆணையம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
