கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் முன்னாள் அதிகாரிகள் நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
அவர்களை விசாரணைக்காவலில் வைக்க நீதிமன்றத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) உத்தரவு பெறப்பட்டதாக ஆணையத்தின் ஒருதரப்பு தெரிவித்தது.
கைதான அந்த நால்வரில் மூவருக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாள்களுக்கு விசாரணைக் காவல் உத்தரவை நீதிபதி இர்ஸா ஸுலைஹா பிறப்பித்தார். மூன்று நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்த நாலாவது நபர், ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை உறுதிப்படுத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பக்கி, ஊழல் தடுப்பு ஆணையச் சட்டப்பிரிவு 16ஏ இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஊழலை எதிர்ப்பதற்கும் தனிப்பட்ட பகைமைக்கும் தொடர்பில்லை: அன்வார்
இதற்கிடையே, ஊழல் மீதான அரசாங்கத்தின் போர், சிலருக்கு எதிராக தனிப்பட்ட பகைமை அடிப்படையிலானது எனக் கூறப்படுவதை பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.
அவ்வாறு கூறுவோரை விமர்சித்த அவர், “இதனாலேயே நாடு சரிவில் உள்ளது. எனவே, இதுகுறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்றார்.
“நான் பகைமை உணர்வோடு, வேண்டுமென்றே தவறுகளைக் கண்டறிய என் வழியிலிருந்து விலகிச் செல்வதாக சிலர் கருதுகின்றனர்.
“ஆனால், இதில் உண்மை கிடையாது. எந்தவொரு விசாரணையிலும் நாங்கள் தலையிட மாட்டோம் என்பதை அமைச்சரவையிடம் நான் தெளிவாகக் கூறியுள்ளேன்,” என்றார் பிரதமர் அன்வார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழல் தடுப்பு முயற்சிகள், சிறந்த ஆளுமையை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும் அவர் விளக்கினார்.
ஊழலை ஒழிப்பதில் தேவையான நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை, உள்நாட்டு வருவாய் ஆணையம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்று பிரதமர் அன்வார் கூறினார்.