பாங்கி: தாம் மலாய் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைக் குறிவைக்கவில்லை என்றும் ஆனால் அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட அமைப்புகளில் முறைகேடுகள் நடந்தால், அந்த அமைப்பை யார் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
ஊழலையும் முறைகேடுகளையும் ஒழிப்பதில் முஸ்லிம்களால் நடத்தப்படும் அமைப்புகளே அனைவருக்கும் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், தாம் ஒருதலைபட்சமாகப் பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டுவது முறையற்றது என்று திரு அன்வார் கூறினார்.
மத்திய நில மேம்பாட்டு ஆணையம் (ஃபெல்டா) மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் முறைகேடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“ஃபெல்டாவில் நடந்த கடந்தகால முறைகேடுகள் குறித்து சிறப்புப் பணிக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்கு முன், விசாரணைகள் முடிவடையும் வரை நான் காத்திருக்கிறேன்.
“ஃபெல்டாவின் நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும், கடந்தகாலப் பிரச்சினைகளைக் கண்டறிவதிலுமே கவனம் செலுத்தப்படுகிறது. தீர்வுகளைக் கண்டறிவதும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை அடையாளம் காண்பதுமே முக்கியம்,” என்று திரு அன்வார் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) பாங்கியில் உள்ள ஒரு ஹோட்டலில், நாடு முழுவதிலுமிருந்து வந்த 300க்கும் மேற்பட்ட ஊடக மேலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, தமது உரையில் அன்வார், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பு முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களால் நடத்தப்பட்டாலும்கூட, ஊழலை ஒப்புக்கொள்வதற்கும் கடந்தகால தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் முஸ்லிம்கள் வெட்கப்படத் தேவையில்லை என்று கூறினார்.
“நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அது ஒரு மலாய் நிறுவனமா, அரசாங்க நிறுவனமா என்று நாங்கள் கேட்பதில்லை. நாங்கள் ஒரு சிக்கலைக் கண்டறிந்தால், நடவடிக்கை எடுப்போம். மேலும் இதை இனம் அல்லது சமயம் சார்ந்த பிரச்சினையாக மாற்றாதீர்கள். உதாரணமாக, தபுங் ஹாஜியை எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில், நீங்கள் என்னிடம் கேட்டால், நிர்வாகம், நெறிமுறைகள், விழுமியங்கள் என்று வரும்போது முஸ்லிம்களும் மலாய்க்காரர்களும் இன்னும் தீவிரமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
ஒரு சிலரின் பேராசையால் எந்தவோர் அமைப்பின் சிறப்பான கடந்த காலமும் அழிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.


