ஊழல்: ராஜபக்சேயின் மகன் கைது

ஊழல்: ராஜபக்சேயின் மகன் கைது

1 mins read
8520643a-a0be-4d39-b5a2-94c065293d36
ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சே (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மகனான 38 வயது யோஷித ராஜபக்சே, ஊழல் குற்றச்சாட்டின்கீழ் புதன்கிழமையன்று (ஜூன் 17) கைது செய்யப்பட்டார்.

கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய யோசித ராஜபக்சே, தகுந்த தகுதிகள் இன்றி அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்ததாகவும் அரசு நிதியைப் பயன்படுத்தி பிரிட்டனில் உயர் பயிற்சி பெற்றதாகவும் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

தகுதியுள்ள வேறொரு கடற்படை வீரரின் வாய்ப்பைப் பறித்து, அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக யோஷித மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இரு பணமோசடி வழக்குகளில் சிக்கிப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகள் வேகம் எடுத்துள்ளன.

யோஷிதவின் வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்க்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு பொருளியல் நெருக்கடிக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டத்தால் பதவியிழந்த மகிந்தவின் தம்பியும் முன்னாள் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும் இம்மாதத் தொடக்கத்தில் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்