கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான ஊழல் வழக்கு மார்ச் மாதம் தொடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த ஊழல் வழக்கு, ஜனா விபாவா திட்டத்துடன் தொடர்புடையது. முகைதீன் தமது பதவிக் காலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை (நவம்பர் 10) நடைபெற்ற விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவெனா முகம்மட் நூர்டின், 29 நாள் விசாரணைக்கான நாள்களை அறிவித்தார்.
நீதிபதி நூர் ருவெனா, இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு நடைபெற்ற முதல் விசாரணை இது.
இந்த வழக்கின் முந்தைய நீதிபதி கே. முனியாண்டி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
மார்ச் 9-11; ஏப்ரல் 13, 16, 28 மற்றும் 29; மே 25 மற்றும் 26; ஜூலை 6-10, 13-17 மற்றும் 27-29; மற்றும் ஆகஸ்ட் 21, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே தமது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் என்று பெர்சத்து தலைவரான முகைதீன் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞரான வான் ஷாஹுருதின் வான் லடின், இந்த ஊழல் வழக்கில் அரசுத் தரப்பில் சுமார் 30 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதிலிருந்து முகைதீனுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஜனா விபாவா திட்டம் தொடர்பாக புக்கரி ஈக்விட்டி நிறுவனம், நெப்டூரிஸ் நிறுவனம், மம்ஃபோர் மற்றும் பெர்சத்துவைச் சேர்ந்த அஸ்மான் யூசோஃப் ஆகியோரிடமிருந்து மொத்தம் 232.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற தமது பதவியைப் பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் முகைதீன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

