தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழல் ஒழிக்கப்படும்; நேப்பாளத்தின் இடைக்காலப் பிரதமர் சூளுரை

2 mins read
02ae0f85-debb-43b8-8a97-9ed99d36dbac
சிங்கா தர்பாரில் உள்ள முக்கிய அரசாங்க வளாகத்தில் அரசுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு 73 வயது திருவாட்டி கார்கி தலைமையின்கீழ், ஆர்ப்பாட்டங்களில் மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 14) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாளத்தில் அண்மையில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அரசாங்கத்தை எதிர்த்து இளையர்கள் ஒன்று திரண்டனர். இதன் விளைவாக அரசாங்கம் கவிழ்ந்தது.

இடைக்காலப் பிரதமராக நேப்பாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திருவாட்டி சுஷிலா கார்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) நியமிக்கப்பட்டார்.

ஊழலை எதிர்த்து இளையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேப்பாளத்தில் ஊழல் ஒழிக்கப்படும் என்று திருவாட்டி கார்கி சூளுரைத்துள்ளார்.

“இளையர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.

நேப்பாளத்தில் ஐந்தில் ஒருவர் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 1,447 அமெரிக்க டாலராக (S$1,857) ஆக உள்ளது.

“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளையர்கள் ஊழலை ஒழிக்க வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும், பொருளியல் சமத்துவம் நடப்பில் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முனைப்புடன் செயல்பட வேண்டும்,” என்றார் திருவாட்டி கார்கி.

சிங்கா தர்பாரில் உள்ள முக்கிய அரசாங்க வளாகத்தில் அரசுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு 73 வயது திருவாட்டி கார்கி தலைமையின்கீழ், ஆர்ப்பாட்டங்களில் மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 14) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வன்முறை தலைவிரித்தாடிய இரண்டு நாள்களில் குறைந்தது 72 பேர் மாண்டனர், 191 பேர் காயமடைந்தனர் என்று நேப்பாள அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஏக்நாராணன் ஆர்யால் கூறினார்.

2008ஆம் ஆண்டில் நேப்பாளத்தில் முடியாட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது தலைவிரித்தாடிய வன்முறைக்குப் பிறகு அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டங்களே நேப்பாளத்தில் நிகழ்ந்த ஆக வன்முறைமிக்க மக்கள் எழுச்சியாகும்.

டிஸ்கார்ட் தளம் மூலம் ஆயிரக்கணக்கான இளம் ஆர்வலர்கள் திருவாட்டி கார்கியை நேப்பாளத்தின் அடுத்த பிரதமராகத் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிரதமராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் இளையர்கள் தமக்கு இப்பொறுப்பை வழங்கியிருப்பதாகவும் திருவாட்டி கார்கி கூறினார்.

இடைக்காலப் பிரதமராக அவர் நியமிக்கப்பட்டதும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

“எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் ஆறு மாதங்களுக்கு மேல் எனது தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருக்காது. எங்கள் கடமைகளை நிறைவு செய்து அடுத்த நாடாளுமன்றம், அமைச்சர்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்போம்,” என்று திருவாட்டி கார்கி உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்
நேப்பாளம்இடைக்காலப் பிரதமர்ஊழல்ஒழிப்பு