தைவானின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற உதவும் நாடுகள்: பொருளியல் அமைச்சர்

தைவானின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற உதவும் நாடுகள்: பொருளியல் அமைச்சர்

2 mins read
897142b7-7ba8-492c-8064-43c4ea307f2f
பகுதி மின்கடத்திகளைத் தயாரிக்க தைவான் திரவ இயற்கை எரிவாயுவை அதிகம் சார்ந்திருக்கிறது. - படம்: ஏஎஃப்பி

தைப்பே: ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து அடுத்த சில மாதங்களுக்குத் தைவானுக்கு தொடர்ந்து திரவ இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று அந்நாட்டுப் பொருளியல் அமைச்சர் காங் மின் சின் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரால் மத்திய கிழக்கின் எரிசக்தி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தைவான் மாற்றுவழிகளில் விநியோகத்தை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தைவான், திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கத்தாரிடமிருந்து வழக்கமாகப் பெற்றது.

கச்சா எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் விநியோகம் செய்யும் நாடுகளுடன் தைவானுக்கு நல்ல நட்புறவு இருப்பதால் இறக்குமதி செய்வதிலோ அவற்றை அதிகரிப்பதிலோ எந்தச் சிக்கலும் இருக்காது என்று அமைச்சர் காங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரு வாரங்களுக்குமுன் எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடு தம்மை நேரடியாகத் தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தம்மை அழைத்த நபர், தைவானின் இயற்கை எரிவாயுத் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்வதாகக் கூறினார் என்றும் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியதாகத் திரு காங் விளக்கம் அளித்தார்.

“என்னைத் தொடர்புகொண்ட மற்றொரு நாடு வேறு சில நாடுகள் இருப்பில் உள்ள பெட்ரோலியத்தை வெளியிட்டுள்ளதாகக் கூறியது. தைவானுக்குத் தேவை ஏற்பட்டால் அந்த நாடுகளுடன் நமக்காக ஒருங்கிணைக்கவும் அவைத் தயாராக உள்ளன,” என்று திரு காங் சுட்டினார்.

கடந்த ஆண்டுகளில் தைவான் அனைத்துலக அளவில் நீண்டகால நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் சம்பாதித்திருப்பதை அவை எடுத்துரைப்பதாகத் திரு காங் மெச்சினார்.

இருப்பினும், தம்மைத் தொடர்புகொண்ட நாடுகளின் பெயர்களைத் திரு காங் வெளியிட மறுத்துவிட்டார்.

மத்திய கிழக்கைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதன் மூலம் 1.2 மில்லியன் டன் திரவ இயற்கை எரிவாயு ஆண்டுதோறும் தைவானுக்கு விநியோகம் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்