இலங்கையில் உள்நாட்டுப் போரால் பிரிந்த கணவனும் மனைவியும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்தனர். அவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
போர் காரணமாக மனைவியும் குழந்தையும் மட்டும் பாதுகாப்பாக கொழும்பு பகுதிக்குச் சென்றனர்.
அப்போதுமுதல் அப்பெண் கோவில்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் தங்கி, மற்றவர்களின் உதவியால் வாழ்ந்து வந்ததாக இலங்கை ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், ஆதரவற்ற நிலையிலிருந்த அப்பெண் சில நாள்களுக்குமுன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தி, அவரின் கணவரையும் உறவினர்களையும் கண்டுபிடிக்க மருத்துவமனை ஊழியர்கள் உதவினர்.
மருத்துவமனையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கணவனும் மனைவியும் மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு அன்பைப் பரிமாறிக்கொண்டது, அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
போர்ச்சூழலில் சில குழந்தைகளைத் தம் கணவர் பொறுப்பில் விட்டுவிட்டு, தம்முடன் ஒரு குழந்தையை மட்டும் அழைத்துக்கொண்டு அப்பெண் கொழும்பிற்குச் சென்றதாகக் கூறப்பட்டது.
அவர் தம்முடன் அழைத்துச் சென்ற குழந்தை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.


