புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், தமக்கு எதிராகத் தொடரப்படும் வழக்கு விசாரணையிலிருந்து இரண்டு நீதிபதிகளை விலக்கும்படி முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சூரியசக்தித் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கைத் திருவாட்டி ரோஸ்மா எதிர்கொள்கிறார். அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் திரு நூர்டின் ஹசான், திரு முகமது ருசிமா கஸாலி ஆகியோரை வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக்கும்படி திருவாட்டி ரோஸ்மா மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த இருவரும் வழக்குடன் சம்பந்தப்பட்ட வேறொரு வழக்கில் முன்னிலையாகியிருப்பதால் அத்தகைய மேல்முறையீட்டை திருவாட்டி ரோஸ்மா முன்வைப்பதாக அவரது வழக்கறிஞர் திரு ஜக்ஜித் சிங் நீதிமன்றத்தில் கூறினார்.
அந்த மேல்முறையீட்டை நிராகரித்த நீதிபதி நூர்டின், திருவாட்டி ரோஸ்மா நீதிமன்றத்துக்கு வராததால் மார்ச் மாதம் 3ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும் கூறினார்.
தாமும் நீதிபதி முகமது ருசிமாவும் எந்தவகையிலும் வழக்குத் தொடர்பில் பாரபட்சமாக இருக்கப்போவதில்லை என்ற நீதிபதி நூர்டின், வழக்கு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.
திருவாட்டி ரோஸ்மா கீழே விழ நேரிட்டபோது அவரது கையிலும் முழங்காலிலும் அடிபட்டதால் நீதிமன்றத்துக்கு வரவில்லை என்ற அவரது வழக்கறிஞர் திரு சிங், வழக்கு விசாரணையை மற்றொரு நாளுக்குத் தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திருவாட்டி ரோஸ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்று நீதிபதி அஸிமா ஓமார் கேட்டதற்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் விரும்பவில்லை என்றார் திரு சிங்.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அறிவிப்பதற்குமுன் திருவாட்டி ரோஸ்மா, அவர்களை வழக்கிலிருந்து விலக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நாளில் சூரியசக்தித் திட்டம் தொடர்பில் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் திருவாட்டி ரோஸ்மா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அவருக்கு 10 ஆண்டுச் சிறையும் 970 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டன.
திருவாட்டி ரோஸ்மாவின் மேல்முறையீட்டை அடுத்து அவரின் தண்டனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

