சோல்: தென்கொரியாவில் புதிதாகப் பிறந்த இரண்டு பச்சிளங்குழந்தைகளைக் கொன்று குளிர்பதனப்பெட்டியில் மறைத்து வைத்த தாய்க்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அக்டோபர் 8ஆம் தேதி பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்து, உடல்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
பிறந்த சில மணி நேரங்களில் மகனையும் மகளையும் முறையே 2018 நவம்பரிலும் 2019 நவம்பரிலும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
வீட்டுக்கு வெளியே ஆள் இல்லாத இடத்திற்கு குழந்தைகளை எடுத்துச் சென்று அவர் கொலை செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பின்னர் உடல்களை கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் போட்டு கியோங்கி மாவட்டம், சுவோனில் உள்ள தனது வீட்டில் குளிர் பதனப் பெட்டியில் அவர் மறைத்து வைத்தார்.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை உடல்கள் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
இரு பச்சிளங்குழந்தைகளைக் கொன்றதை நீதிமன்றத்தில் தாயார் ஒப்புக்கொண்டார். இதர மூன்று குழந்தைகளை வளர்க்க பணமில்லாமல் சிரமப்படுவதால் குழந்தைகளைக் கொன்றுவிட்டதாக அவர் கூறினார்.
2023 மே மாதம் குழந்தைகள் பிறந்தது அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாததை அதிகாரிகள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரது குற்றச்செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
அவரது குழந்தைகளின் பிறப்பு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் குழந்தைகளுக்கு என்னவாயிற்று என்பதைக் கண்டறிய காவல்துறை விசாரித்தது.